மாநில சீனியர் நீச்சல் போட்டி பல சாதனைகள் முறியறிப்பு
சென்னை,தமிழக மாநில நீச்சல் சங்கத்தின் சார்பில், 79வது மாநில சீனியர் நீச்சல் மற்றும் டைவிங் போட்டிகள், சென்னை வேளச்சேரியில் உள்ள எஸ்.டி.ஏ.டி., நீச்சல் குள வளாகத்தில் நடக்கின்றன.ஆண்களுக்கான 200 மீ., தனிநபர் மெட்லி நீச்சலில், பெனடிக்டன் ரோகித் போட்டி துாரத்தை 2 நிமிடம் 08.24 வினாடிகளில் கடந்து, புதிய மீட் சாதனை படைத்தார்.கடந்த 2011ம் ஆண்டில், டர்ட்ல்ஸ் அணி வீரர் ஜெ.அக்னீஸ்வர், 2 நிமிடம் 09.44 வினாடிகளில் கடந்து படைத்த சாதனையை, 14 ஆண்டுகளுக்கு பின், பெனடிக்டன் முறியடித்து அசத்தினார்.ஆண்களுக்கான 50 மீ., பிரஸ்ட்ரோக் நீச்சலில், சென்னை முகப்பேரில் உள்ள எஸ்.டி.ஏ.டி., டால்பின் அணி வீரர் யாதேஷ் பாபு, போட்டி துாரத்தை 28.51 வினாடிகளில் நீந்தி, தனது சாதனையை தானே முறியடித்துள்ளார். கடந்த ஆண்டு, இவர் 29.06 வினாடிகளில் கடந்து, புதிய மீட் சாதனை படைத்திருந்தார்.ஆண்களுக்கான 50 மீ., ப்ரீஸ்டைல் நீச்சல் போட்டியில், எஸ்.ஏ.வி., டைடன்ஸ் அணி வீரர் ஜாஷ்வா தாமஸ், போட்டி துாரத்தை, 23.08 வினாடிகளில் கடந்து, 2023ம் ஆண்டு, அக்வாடிக் மதுரை அணி வீரர் பி.விகாஷ் சாதனையை முறியடித்துள்ளார். இன்றுடன் போட்டிகள் நிறைவடைகின்றன.