| ADDED : நவ 27, 2025 02:54 AM
சென்னை: சென்னையில், 2 வயது குழந்தையை தெருநாய் கடித்து குதறியது, அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சென்னை, கொடுங்கையூர், முத்தமிழ் நகரைச் சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுநர் முகமது அப்துல். இவரது மனைவி மும்தாஜ். இவர்களுக்கு, முகமது அப்துல்லா, 5; முகமது ரிஸ்வான், 2, என, இரு மகன்கள் உள்ளனர். மும்தாஜ் நேற்று வீட்டில் வேலை செய்து கொண்டிருந்த போது, சிறுவர்கள் இருவரும் வீட்டிற்கு வெளியே நின்று விளையாடி கொண்டிருந்தனர். அப்போது, தெரு நாய் ஒன்று குழந்தை முகமது ரிஸ்வானின் கன்னத்தை கடித்து இழுத்தது. குழந்தையின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர், நாயிடம் இருந்து குழந்தையை மீட்டனர். நாய் கடித்ததில் முகத்தில் பலத்த காயமடைந்த குழந்தையை, எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து கொடுங்கையூர் போலீசார் விசாரிக்கின்றனர். தெருநாய்கள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருவது, பகுதிமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.