சித்தியின் சித்ரவதை மாணவி தற்கொலை
ஓட்டேரி, பெரம்பூரில், சித்தியின் சித்ரவதையால் பிளஸ் 2 மாணவி தற்கொலை செய்து கொண்டார்.பெரம்பூர், எலிகான் தெருவைச் சேர்ந்தவர் அமர்நாத், 45. இவரது முதல் மனைவி சங்கீதா. தம்பதிக்கு இரு மகள்கள். இளைய மகள் நந்தினி, 16; பிளஸ் 2 மாணவி.கடந்த 10 ஆண்டுகளுக்கு முன், சங்கீதா பிரிந்து சென்ற நிலையில், மகள்கள் தந்தையுடனே இருந்தனர். கடந்த 2015ல் அமர்நாத், இரண்டாவதாக உஷா, 40, என்ற மாற்றுத்திறனாளியை திருமணம் செய்து கொண்டார்.கடந்த சில நாட்களாக உஷா, நந்தினியை கொடுமைப்படுத்தி வந்துள்ளார். அவரை படிக்க விடாமல் வீட்டு வேலைகளை செய்ய சொல்லி அடித்ததாக கூறப்படுகிறது. இது குறித்து நந்தினியும் தோழியரிடம் சொல்லி அழுததாக கூறப்படுகிறது.இந்த நிலையில், கடந்த 3ம் தேதி மாலை துணி துவைக்காமல் இருந்ததற்காக, நந்தினியை உஷா கண்டித்துள்ளார். இதனால் மன விரக்தியடைந்த நந்தினி, வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.ஓட்டேரி போலீசாரின் விசாரணையில், சித்தியின் கொடுமையாலேயே நந்தினி தற்கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து, நேற்று உஷாவையும் அவருக்கு உறுதுணையாக இருந்ததற்காக, சிறுமியின் தந்தை அமர்நாத்தையும் போலீசார் கைது செய்தனர்.