உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  பூங்கா அமைப்பதால் புழல் ஏரிக்கு திடீர்... ஆபத்து? கரை பலவீனமாகுமோ என மக்கள் அச்சம்

 பூங்கா அமைப்பதால் புழல் ஏரிக்கு திடீர்... ஆபத்து? கரை பலவீனமாகுமோ என மக்கள் அச்சம்

புழல் ஏரி கரையை ஒட்டி அமைக்கப்படும் பூங்காவுக்காக, 60க்கும் மேற்பட்ட துாண்களை, சி.எம்.டி.ஏ., அமைத்து வருவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கரைகளுக்கு பாதிப்பு ஏற்படுமோ என, அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள புழல் ஏரி நீர், சென்னையின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்கிறது. புழல் ஏரி நிரம்பும்போது, அதில் இருந்து நீரை வெளியேற்றுவதற்காக, செங்குன்றத்தில் இரண்டு ஷட்டர்களுடன் கூடிய மதகுகள் உள்ளன. பருவமழை காலங்களில் திறக்கப்படும் உபரி நீர், கால்வாய் வழியே, 11 கி.மீ., பயணித்து சடையங்குப்பம் அருகே வங்க கடலில் கலக்கிறது. இந்நிலையில், வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின்கீழ், புழல் ஏரிக்கரையில், நீர் கசிவு பகுதியில், 8.17 ஏக்கரில், 16.96 கோடி ரூபாயில் பூங்கா அமைக்கும் பணியை சி.எம்.டி.ஏ., துவக்கியுள்ளது. இதற்காக, ஜோன்ஸ் டவர் எதிரே, செம்மண் கரையோரம், 60க்கும் மேற்பட்ட துாண்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஏரியில் தண்ணீர் அதிகம் உள்ளபோது, செம்மண் வழியாக தண்ணீர் லேசாக வெளியேறும். காற்றில் எழும் அலையின் வேகத்திற்கு ஈடுகொடுத்து கரையில் உடைப்பு ஏற்படாமல் இருக்க, இந்த நீர்கசிவு உதவுகிறது. பூங்கா பணிக்காக கான்கிரீட் துாண்கள் அமைப்பது, ஏரிக்கரையின் பலத்திற்கு வேட்டு வைக்கும் என்ற சர்ச்சை எழுந்துள்ளது. கரை உடைப்பு ஏற்பட்டால் தங்களுக்கு ஆபத்து ஏற்படுமோ என, தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் அச்சமடைந்துள்ளனர். 'புழல் ஏரி எதிரே, தற்காலிக பேருந்து நிலைய இடத்தில் பூங்காவை கட்டியிருக்கலாம்' என்றும் அவர்கள் கூறியுள்ளனர். சென்னை மண்டல நீர்வளத்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது: கசிவு நீர் தேங்கும் இடத்தில் பூங்கா அமைக்க, நீர்வளத்துறையிடம் தடையின்மை சான்று பெற வேண்டும். பணிகள் முடிந்ததும் வாங்கி கொள்ளலாம் என, சி.எம்.டி.ஏ., நினைக்கிறது. ஏரியின் ஷட்டர் மதகை ஒட்டிய இரு பகுதிகளிலும், கான்கிரீட் தடுப்பு சுவர்களை ஒட்டி பூங்கா அமைக்க ஆலோசனை தரப்பட்டது. அதை நிராகரித்துவிட்டு, செம்மண் கரையை ஒட்டி பூங்கா அமைக்கின்றனர். முன்பிருந்த அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை. இனிமேல் பணியை தடுக்க வாய்ப்பில்லை. இவ்வாறு அவர் கூறினார். - நமது நிருபர் -:


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ