சிறந்த கண் டாக்டராக சூசன் ஜேக்கப் தேர்வு
சென்னை, கண்புரை மற்றும் ஒளிவிலகல் அறுவை சிகிச்சையில் உலகளாவிய முதல், 10 நிபுணர்களில், டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனையின் டாக்டர் சூசன் ஜேக்கப் தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.இந்திய கண் மருத்துவர்கள் சங்கம் சார்பில் உலகளவிய கண்புரை மற்றும் ஒளிவிலகல் அறுவை சிகிச்சை டாக்டர்களின், 'தி ஆப்தால்மாலஜிஸ்ட் பவர் லிஸ்ட்- 2025' வெளியிடப்பட்டுள்ளது. இப்பட்டியலில் இடம்பெற்ற மூன்று இந்தியர்களில், டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனையின் டாக்டர் சூசன் ஜேக்கப் ஒருவராக தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.இவர், ஒளிவிலகல் அறுவை சிகிச்சை, விழித்திரை மாற்று, சிக்கலான கண்ணின் முன்பக்க புனரமைப்புகள், கண் அழுத்த நோய் உள்ளிட்ட சிகிச்சையில், 25 ஆண்டுகளுக்கு மேல் நிபுணத்துவம் பெற்றுள்ளார்.இதுகுறித்து, அகர்வால்ஸ் மருத்துவமனை குழும தலைவர் அமர் அகர்வால் கூறியதாவது:டாக்டர் சூசன் ஜேக்கப், கூம்பு விழிப்படலத்திற்கான சிகிச்சையை, மாற்றியமைத்த புதுமையான அறுவை சிகிச்சை நுட்பத்தை பயன்படுத்தி, பலருக்கு வழிகாட்டினார். உலகளவிலான கவுரவத்தை அவர் பெறும்போது, நாங்களும் பெருமைப்படுகிறோம். இதுபோன்றவர்களின் செயல்பாடுகள், இளம் டாக்டர்களுக்கு உத்வேகம் அளிக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.