உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பரதநாட்டிய அரங்கேற்றத்தில் ஜாலம் செய்த ஸ்வப்னா

பரதநாட்டிய அரங்கேற்றத்தில் ஜாலம் செய்த ஸ்வப்னா

மயிலாப்பூரில் உள்ள ரசிக ரஞ்சனி சபாவில், ரமேஷ் - துர்கா தம்பதியின் மகளும், 'ஸ்ரீ நிருத்ய நிகேதன்' இயக்குநர் ராதாமனி வரதாச்சாரியின் மாணவியுமான ஸ்வப்னா ராமசந்திரனின் பரதநாட்டியம் அரங்கேற்ற விழா, நேற்று முன்தினம் நடந்தது.

மேடையில் பரதநாட்டியம் துவங்கியதும், 'ஆங்கிகம்' மற்றும் 'சாத்விக' அபிநயங்களில் கற்றுத் தேர்ந்தவராக, அனைவரின் உள்ளங்களையும் கொள்ளை கொண்டார். ஜாவளி, வர்ணம், பல்லவி, அனுபல்லவி என, அனைத்திலும் ஜொலித்தார். 'வேலனைக் காண்போம் வா...' என்ற பாடலில், வேலனின் தரிசனம் கிட்டுமோ என்று ஏங்கும் பக்தர்களுக்கு, வேலன் காட்சி கொடுப்பதை போன்ற உணர்வை கடத்தியதில், ஸ்வப்னாவுக்குள் உள்ள பக்தி சுவை மிளிர்ந்தது. கந்தனை கண்முன் நிறுத்தியது போல், ரசிகர்களும் உணர்ச்சி வசப்பட்டனர். திரவுபதியின் சேலையை மீட்ட கிருஷ்ணனை போற்றும் வகையில் அமைந்த, 'அரவிந்த பத மலர் நோகுமோ' என்ற பாடலுக்கு, தன் நன்றி மற்றும் பக்தி உணர்வுகளை நேர்த்தியாக வெளிப்படுத்தினார். இறுதியில், 'விட்டல பாண்டுரங்க' எனும் அபங் பாடும்போது, ரசிகர்களை பரவசத்தில் ஆழ்த்தி, அரங்கையே உற்சாகத்தில் கைகொட்டி ஆடச் செய்தார். Gallery பரதநாட்டிய குரு ராதாமணி வரதாச்சாரியின் நட்டுவாங்கம், பாடகர் அபிலாஷ் கிரிபிரசாத்தின் குரல் வளம் முக்கிய பங்காற்றியது. வயலின் அனந்தகிருஷ்ணன், மிருதங்கம் சர்வேஷ் கார்த்திக், புல்லாங்குழல் தேவராஜ் ஆகியோரும் சிறப்பு சேர்த்தனர். - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !