மேலும் செய்திகள்
உணவு டெலிவரி ஊழியர் சாலை விபத்தில் பலி
13-Sep-2025
பெரும்பாக்கம்:படுமோசமான சாலையில் நிலைதடுமாறி விழுந்த 'ஸ்விக்கி' உணவு டெலிவரி ஊழியர் மீது, தண்ணீர் லாரி ஏறி இறங்கியதில் பரிதாபமாக உயிரிழந்தார். பெரும்பாக்கம், ஜெ.ஜெ.நகர் அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சகாயராஜ், 40; 'ஸ்விக்கி' எனும் ஆன்லைன் உணவு ஆர்டர் மற்றும் டெலிவரி நிறுவனத்தின் ஊழியர். இவர், நேற்று முன்தினம் இரவு 9:00 மணி யளவில், தன் 'ஹீரோ ஸ்ப்ளெண்டர் பிளஸ்' பைக்கில் மேடவாக்கம் - சோழிங்கநல்லுார் இணைப்பு சாலையான செம்மொழி சாலை வழியாக, சோழிங்கநல்லுார் நோக்கி உணவு வினியோகம் செய்ய சென்று கொண்டிருந்தார். பெரும்பாக்கம் சர்ச் அருகே சென்றபோது, சாலையில் தடுமாறி விழுந்துள்ளார். அப்போது, பின்னால் வந்த தண்ணீர் லாரி எதிர்பாராத விதமாக அவர் மீது ஏறி இறங்கியதில், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து விசாரித்த பள்ளிக்கரணை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், சகாயராஜின் உடலை பிரேத பரிசோதனைக்காக, குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்து தொடர்பாக வழக்கு பதிவு செய்து, தண்ணீர் லாரி ஓட்டுநரான திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த சீனு, 30, என்பவரை கைது செய்து விசாரிக்கின்றனர். 2வது விபத்து முதற்கட்ட விசாரணையில், மெட்ரோ ரயில் வழித்தடப் பணியால் சேதமடைந்த சாலையில் சறுக்கி விழுந்ததே இந்த விபத்திற்கு காரணம் என, போலீசார் தெரிவித்தனர். செப்டம்பர் மாதத்தில், இப்பகுதியில் ஏற்கனவே இதேபோன்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
13-Sep-2025