உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / 9 மாதங்கள் கூடாத சிண்டிகேட் கூட்டம் சென்னை பல்கலையில் நிர்வாக சிக்கல்

9 மாதங்கள் கூடாத சிண்டிகேட் கூட்டம் சென்னை பல்கலையில் நிர்வாக சிக்கல்

சென்னை, சென்னை பல்கலையில், ஒன்பது மாதங்களாக சிண்டிகேட் குழு கூட்டம் கூடவில்லை. அதனால், நிர்வாக சிக்கல்களை சந்தித்து வருவதாகவும், பல்கலையின் முக்கிய ஆவணங்கள், அரசின் தணிக்கைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. சென்னை பல்கலை, கடந்த சில ஆண்டுகளாகவே, கடும் நிதி நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. தற்போது, துணைவேந்தர் பணியிடம் காலியாக உள்ளதால், நிர்வாக ரீதியிலான பணிகள் முடக்கி கிடக்கின்றன. ஒவ்வொரு மாதமும் கூட வேண்டிய சிண்டிகேட் குழு கூட்டமும், கடந்த ஒன்பது மாதங்களாக கூடவில்லை. இறுதியாக, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், சிண்டிகேட் குழு கூட்டம் கூடியது. கடந்த 9ம் தேதி கூடுவதாக இருந்த சிண்டிகேட் கூட்டமும், இறுதி கட்டத்தில் ஒத்திவைக்கப்பட்டது. ஒன்பது மாதங்களாக, சிண்டிகேட் குழு கூடாததால், முக்கிய முடிவுகள் அனைத்தும் பல்கலை நிர்வாக குழுக்களே எடுத்து வருகின்றன. பேராசிரியர்கள், அலுவலர்கள் பதவி உயர்வு, பாடத்திட்டம் உட்பட பல்வேறு முக்கிய முடிவுகளை, நிர்வாகக் குழுவே மேற்கொண்டு வருகிறது. நிர்வாக குழுக்கள் எடுக்கும் முடிவுகள், பெரும்பாலும் தவறான முடிவுகளாகவே இருப்பதாக, பேராசிரியர்கள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும், உதவி, துணை பதிவாளர் பதவி உயர்வு பட்டியல் தயாரிப்பும், நிர்வாக குழுக்களால் தொடர்ந்து தாமதமாகி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்நிலையில், நிர்வாக முடிவுகள் தொடர்பான ஆவணங்கள், ஏற்கனவே பல்கலையின் தணிக்கைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில், தமிழக அரசும் தணிக்கைக்கு உட்படுத்த இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து, சென்னை பல்கலை வட்டாரங்கள் கூறியதாவது: நிதி நெருக்கடியில் சிக்கியிருக்கும் சென்னை பல்கலை, தொடர்ந்து சிக்கல்களை சந்தித்து வருகிறது. நிர்வாக குழுக்கள், பல்கலை சார்ந்து எடுக்கும் முடிவுகள், தமிழக அரசு கேள்வி எழுப்பும் நிலைக்கு கொண்டு செல்கின்றன. நிதி ஒதுக்கீடு, பதவி உயர்வு உட்பட பல்வேறு முக்கிய ஆவணங்கள், ஏற்கனவே பல்கலையின் தணிக்கை குழு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில், அதே ஆவணங்களை, தமிழக அரசின் தணிக்கை குழு, மீண்டும் ஆய்வுக்கு உட்படுத்த கொண்டு சென்றிருக்கிறது. தன்னாட்சி அங்கீகாரம் பெற்ற பல்கலை, தற்போது வேறு திசை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறது. பல்கலையின் நிதி நெருக்கடியை தீர்க்க, தமிழக அரசு மானியம் வழங்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை