மூழ்கும் கார்களை காப்பாற்ற தாம்பரம் மாநகராட்சி தனி இடம்
தாம்பரம், தாம்பரம் மாநகராட்சி பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆய்வு கூட்டம், தாம்பரம் மாநகராட்சியில் நேற்று நடந்தது.செங்கல்பட்டு மாவட்ட கண்காணிப்பாளர் ராகுல்நாத் தலைமையில், மாநகராட்சி கமிஷனர் பாலசந்தர் மற்றும் அனைத்து துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.மாநகராட்சி பகுதிகளில், கடந்த மழையின்போது, வெள்ளம் தேங்கிய பகுதிகளின் தற்போதைய நிலவரம், அங்கு எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை மற்றும் நிவாரண முகாம்கள் குறித்து, கமிஷனர் பாலசந்தர் எடுத்துரைத்தார்.மழைநீர் தேங்கக்கூடிய இடங்களில் எடுக்கப்பட்ட நடவடிக்கை தொடர்பாக, ராகுல்நாத் எழுப்பிய கேள்விகளுக்கு, துறை வாரியாக அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.கூட்டத்திற்கு பின், மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:இரண்டாவது மண்டலம் பல்லாவரம் பகுதிகளில், வெள்ளம் தேங்குவதை தடுக்க, பல்லாவரம் - துரைப்பாக்கம் ரேடியல் சாலையில், நெடுஞ்சாலைத் துறை சார்பில் கட்டப்பட்டு வரும் கால்வாய் பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது.குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்குள் வெள்ளம் புகுந்த பின், அங்குள்ள நோயாளிகளை வேறு இடத்திற்கு மாற்றுவதே வழக்கமாக இருக்கிறது. அதை விடுத்து, இம்முறை முன்கூட்டியே, தேவையான நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.அதிக வெள்ளம் தேங்கக்கூடிய, பெருங்களத்துார், சி.டி.ஓ., காலனி, குட்வில் நகர், சசிவரதன் நகர் அன்னை அஞ்சுகம் நகர், சமத்துவ பெரியார் நகர் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு, வெள்ள பாதிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளோம்.அதேபோல், கடந்தாண்டு வெள்ளத்தில், பல்லாவரம், குரோம்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான கார்கள் மூழ்கி சேதமாகின. பலர், மழைக்காலத்தில் மேம்பாலங்களில் கார்களை நிறுத்துவதை வழக்கமாக வைத்துள்ளனர். இதனால், போக்குவரத்து பாதிப்பும் ஏற்படுகிறது.அதனால், இம்முறை, வெள்ளத்தில் மூழ்கும் கார்களை காப்பாற்ற, ரயில்வே துறையிடம் அனுமதி பெற்று, தாம்பரம் ரயில்வே மைதானத்தை, 'கார் பார்க்கிங்'காக மாற்ற ஏற்பாடு செய்யப்பட உள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.