சொந்தமாக கோசாலை அமைக்க தாம்பரம் மாநகராட்சி நடவடிக்கை
தாம்பரம், சாலைகளில் உலவும் மாடுகளை பிடித்து பாதுகாக்க, தாம்பரம் மாநகராட்சி பகுதிக்கென, சொந்தமாக கோசாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.தாம்பரம் மாநகராட்சி உட்பட்ட சாலைகளில் உலவும் மாடுகள் கொண்டமங்கலம் கோசாலையில் அடைக்கப்பட்டன. அங்கு ஒப்படைக்கப்படும் மாடுகள் முறையாக பராமரிக்கப்படாததால், சமீபகாலமாக வாலாஜாபாத்தில் உள்ள ஆர்.எஸ்.ஆர்., டிரஸ்ட் கோசாலைக்கு மாடுகள் அனுப்பப்படுகின்றன. அங்கு, மாடு ஒன்றுக்கு, 2,000 ரூபாய் பராமரிப்பு தொகை வசூலிக்கப்படுகிறது.மாடுகளை அடைக்க, தாம்பரம் மாநகராட்சிக்கென தனியாக கோசாலை இல்லாததால், மாநகராட்சி பகுதியிலேயே கோசாலை அமைக்க, மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்து, அதற்காக இடங்களை தேடி வந்தது.இந்நிலையில், 5வது மண்டலம், மாடம்பாக்கம், ராஜம்மாள் நகரில் உள்ள ஐந்து ஏக்கர் நிலத்தை தேர்வு செய்து, அங்கு கோசாலை அமைக்க முடிவு செய்துள்ளது.இதற்காக, ஒரு கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. விரைவில், கோசாலை அமைக்கும் பணிகள் துவக்கப்பட உள்ளன. புதிதாக அமைக்கப்படும் கோசாலை, 50 மாடுகளை பராமரிக்கும் அளவிற்கு அமைகிறது.மாநகராட்சி பகுதிகளில் பிடிக்கப்படும் மாடுகள், இங்கு அடைக்கப்படும் எனவும், 15 நாட்களுக்குள் 2,000 ரூபாய் அபராதம் செலுத்தி அழைத்து செல்லலாம் எனவும், மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.