இந்திய ஓபன் தடகள போட்டி தமிழக வீராங்கனையர் அசத்தல்
சென்னை, தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில், தேசிய அளவிலான, இந்திய ஓபன் தடகள போட்டி, சென்னை நேரு விளையாட்டு அரங்கில், நேற்று காலை 8:00 மணிக்கு துவங்கின.தமிழகம், ஹரியானா, டில்லி உட்பட, நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்து, 460 வீரர் - வீராங்கனையர் பங்கேற்றனர்.போட்டியில், 100, 200, 1,500, 10,000 மீ., ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், வட்டு எறிதல், குண்டு எறிதல், தடை தாண்டும் ஓட்டம் உள்ளிட்ட இருபாலருக்கும், தலா 14 வகையாக போட்டிகள் நடக்கின்றன.பெண்களுக்கான கொம்பு ஊன்றி தாண்டுதல் போட்டியில், தமிழகத்தின் பரனிகா இளங்கோவன், 3.90 மீ., தாண்டி முதலிடத்தை பிடித்தார்.மற்றொரு தமிழக வீராங்கனை பவித்ரா வெங்கடேசன் 3.82 மீ., தாண்டி இரண்டாமிடத்தை தட்டிச் சென்றார்.பெண்களுக்கான 100 மீ., தடை தாண்டும் ஓட்டத்தில், தமிழக வீராங்கனையர் நித்யா ராம்ராஜ், நந்தினி, ஸ்ரீரேஷ்மா உள்ளிட்டோர் முறையே, முதல் மூன்று இடங்களை வென்றனர்.அதேபோல், பெண்களுக்கான 800 மீ., ஓட்டத்தில், பஞ்சாப் வீராங்கனையர் ட்விங்கிள் சவுத்ரி, பந்தைய துாரத்தை, 2:09.39 நிமிடத்தில் கடந்து முதலிடத்தை பிடித்தார்.அவரை தொடர்ந்து, 2:11.56 நிமிடத்தில் கடந்த தமிழக வீராங்கனை அன்ஸ்லின் இரண்டாமிடத்தை பிடித்து அசத்தினார்.இப்போட்டியில் தேர்வாவோர், இம்மாதம் 21 - 24 தேதி வரை நடக்கும், 28வது தேசிய சீனியர் தடகளப் போட்டியில் பங்கேற்க தகுதி பெறுவர்.