இயற்கை விவசாயம் செய்ய வேண்டிய கட்டாயத்தில் தமிழகம்: அண்ணாமலை
சென்னை,சென்னை ஐ.ஐ.டி., உயர் கல்வி நிறுவனமும், 'வீ தி லீடர்ஸ்' என்ற அறக்கட்டளையும் இணைந்து, சென்னையில் நேற்று, இளைஞர் விவசாய மாநாட்டை நடத்தின. அதில், இயற்கை விவசாயத்தின் முக்கியத்துவம் மற்றும் அதன் தேவைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. இயற்கை விவசாயத்திற்கான பயிற்சி வகுப்பும் அறிமுகம் செய்யப்பட்டது . இம்மாநாட்டில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற, தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை பேசியதாவது: உலகின் சிறந்த பொறியாளர்கள் விவசாயிகள். நம் நாட்டின் வளர்ச்சியில், சுதந்திரத்திற்கு பின், ஒரு 'டிரில்லியன்' பொருளாதாரம், அதாவது, 86 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள பொருளாதார நாடு என்ற பெருமை, 69 ஆண்டுகளில் கிடைத்தது. ஆனால், ஐந்து டிரில்லியன் பொருளாதாரத்தை, அடுத்த ஆறரை ஆண்டுகளில் எட்டி விடுவோம். இதில், விவசாயிகளின் பங்கையும் நாம் குறிப்பிட வேண்டும். இந்தியா முழுதும், 59 லட்சம் ஹெக்டேரில் இயற்கை விவசாயம் செய்யப்படுகிறது. இதில், மத்திய பிரதேசம் முதல் மாநிலம். மத்திய அரசின் அறிக்கையின்படி, தமிழகத்தில் வெறும், 75,000 ஹெக்டரில் தான் இயற்கை விவசாயம் செய்யப்படுகிறது. எனவே, தமிழகத்தில் இயற்கை விவசாயம் செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். கோவையில் உள்ள ஒரு பள்ளியில், விவசாயம் பாடத்திட்டமாக உள்ளது. அமெரிக்க அதிபர் டிரம்ப், இந்தியர்களை வேண்டாம் என்று சொல்லி இருக்கிறார். வேண்டாம் என்று சொல்கிற நாட்டில், கூனிக்குறுகி வேலை பார்க்க வேண்டாம். ரசாயனத்தை நீக்கி விட்டு, இயற்கை முறையில் தயாரித்ததை கொடு என, வெளிநாடுகளில் கேட்கின்றனர். அதனால் தான், அவர்களுக்கு அதிகளவில் புற்றுநோய் வருவது கிடையாது. நாம் ஏதோ ஒரு வகையில் பாதிக்கப்பட்ட பின்தான், இயற்கை விவசாயத்தை நோக்கி நகர்கிறோம்; முன்கூட்டியே மாறுவது நல்லது. இவ்வாறு அவர் பேசினார். சென்னை ஐ.ஐ.டி., இயக்குனர் காமகோடி பேசுகையில், ''நம் வயிற்றுக்கு விஷமில்லாத உணவை கொடுக்க வேண்டும், அதற்காகவே இயற்கை விவசாயத்தை கையில் எடுக்க வேண்டும். வரும் காலத்தில் செலவில்லாத விவசாயம் மேற்கொள்ள ஆராய்ச்சி செய்ய வேண்டும். இதற்கு நிறைய, 'ஸ்டார்ட் அப்' நிறுவனங்கள் முன்வர வேண்டும்,'' என்றார் ***