தேசிய கூடைப்பந்து போட்டி வெற்றியுடன் துவங்கிய தமிழகம்
சென்னை,எஸ்.ஜி.எப்.ஐ., எனும் இந்திய பள்ளிகள் விளையாட்டு குழுமம் மற்றும் பள்ளிக் கல்வித்துறை சார்பில், மாணவியருக்கான 68வது தேசிய கூடைப்பந்து போட்டி நேற்று துவங்கியது.போட்டிகள், செயின்ட் ஜோசப் பொறியியல் கல்லுாரியின் ஆதரவில், செம்மஞ்சேரியில் உள்ள கல்லுாரி வளாகத்தில் நடக்கிறது.இதில், 17 வயதுக்கு உட்பட்டோருக்கான பிரிவு மாணவியருக்கு மட்டும் நடக்கிறது. போட்டியில், தமிழகம் உட்பட நாடு முழுதும் இருந்து, 33 மாநில அணிகள் பங்கேற்றுள்ளன. போட்டிகள், 'லீக்' மற்றம் 'நாக் - அவுட்' முறையில் நடக்கிறது. நேற்று துவங்கிய முதல் நாள் போட்டியை, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மகேஷ், தென்சென்னை எம்.பி., - தமிழச்சி தங்கபாண்டியன், செயின்ட் ஜோசப் கல்லுாரி நிறுவனர் பாபுமனோகரன் உள்ளிட்டோர் துவங்கி வைத்தனர்.முதல் போட்டியில், தமிழகம் - ராஜஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ஆட்டத்தில் 51 - 29 என்ற கணக்கில், முதல் வெற்றியை தமிழக அணி பதிவு செய்தது. அடுத்த போட்டியில், பஞ்சாப் அணி, 51 - 42 என்ற கணக்கில் ஹரியானாவை வீழ்த்தியது.மற்றொரு போட்டியில், மஹாராஷ்டிரா, 44 - 05 என்ற கணக்கில் பீஹாரையும், கேரளா, 61 - 41 என்ற கணக்கில் சத்தீஸ்கரையும் தோற்கடித்தன. போட்டிகள் தொடர்ந்து நடக்கின்றன.