உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / தேசிய சீனியர் ஹாக்கி போட்டி தமிழக அணி அதிர்ச்சி தோல்வி

தேசிய சீனியர் ஹாக்கி போட்டி தமிழக அணி அதிர்ச்சி தோல்வி

சென்னை:ஹாக்கி இந்தியா சீனியர் ஆடவர் தேசிய சாம்பியன்ஷிப் போட்டிகள், எழும்பூர் ராதாகிருஷ்ணன் அரங்கில் நடக்கின்றன.நேற்று நடந்த முதல் காலியிறுதி ஆட்டத்தில், முன்னாள் சாம்பியனான பஞ்சாப் மற்றும் மணிப்பூர் அணிகள் எதிர்கொண்டன.போட்டி துவங்கியது முதல், இரு அணிகளும், அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தின. மணிப்பூர், 14வது நிமிடத்தில் பெனால்டி கார்னர் வாயிலாக முதல் கோல் அடித்தது. விரைவாக பதிலளித்த பஞ்சாப், 18வது நிமிடத்தில் 'பீல்டு கோல்' வாயிலாக ஸ்கோரை சமன் செய்தது. பின், 24வது நிமிடத்தில் மற்றொரு பெனால்டி கார்னர் கோல் வாயிலாக முன்னிலை பெற்றது. மணிப்பூர் அணி, 36வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்து, 2 - 2 என, சமன் செய்தது. பதற்றம் அதிகரித்ததால், மணிப்பூர், 51வது நிமிடத்தில், பெனால்டி கார்னர் வாயிலாக மீண்டும் ஒரு கோல் அடித்தது.அதிரடியாக இறங்கிய பஞ்சாப், 59வது நிமிடத்தில் ஒரு 'பீல்ட்' கோலுடன் ஆட்டத்தை 3 - 3 என்ற கணக்கில் டிரா செய்ததால், போட்டி 'ஷூட் அவுட்'டில் தள்ளியது. இதில், இரு அணிகளும் போராடி, 4 - 3 என்ற கணக்கில் மணிப்பூர் அணி வெற்றி பெற்று அரையிறுதிக்குள் முன்னேறியது.மற்றொரு காலிறுதியில், ஹரியானா மற்றும் மஹாராஷ்டிரா அணிகள் மோதின. போட்டியின் 12வது நிமிடத்தில் பீல்ட் கோலுடன் ஆட்டத்தை துவங்கியது மஹாராஷ்டிரா. பின், 48வது நிமிடத்தில் பெனால்டி கார்னர் வாயிலாக ஹரியானா ஒரு கோல் அடித்து சமன் செய்தது.தொடர்ந்து, வலுவடைந்த ஹரியானா, அடுத்தடுத்த நிமிடங்களில் கோல்களை குவித்து முடிவில், 5 - 1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.மூன்றாவது காலிறுதியில், தமிழகம் மற்றும் உ.பி., அணிகள் மோதின. அதில், 3 - 1 என்ற கோல் கணக்கில் உ.பி., அணி, தமிழக அணியை தோற்கடித்து வெற்றி பெற்றது. தமிழக அணியின் தோல்வி, ரசிகர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ