இந்தாண்டுக்குள் மலேரியாவை ஒழிக்க இலக்கு நிர்ணயிப்பு
சென்னை:'மலேரியா நோயால், கடந்த ஆண்டு, 347 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டுக்குள் தொற்றை முற்றிலுமாக ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது' என, மக்கள் நல்வாழ்வுத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.உலக மலேரியா தினம் இன்று அனுசரிக்கப்படும் நிலையில், அவர்கள் கூறியதாவது:மலேரியா நோய், 'பிளாஸ்மோடியம்' ஒட்டுண்ணியால் பாதிக்கப்படும், 'அனோபிலிஸ்' வகை கொசுக்களால் பரவுகிறது. இவ்வகை கொசுக்கள் மனிதர்களை கடிக்கும் போது, பாதிப்பை ஏற்படுத்துகிறது. காய்ச்சல், சோர்வு, வாந்தி போன்ற அறிகுறிகள் ஏற்படுகின்றன.இந்நோயின் தீவிரம், கல்லீரல் மற்றும் ரத்த சிவப்பணுக்களில் பாதிப்பை ஏற்படுத்தி, உயிரிழப்பை ஏற்படுத்தக் கூடியது. இந்நோய்க்கு ஆரம்ப நிலையிலேயே சிகிச்சை பெற வேண்டும்.குறிப்பாக, மலேரியா சிகிச்சை பெற்றவர்கள், மாதம்தோறும் ரத்த பரிசோதனை செய்வதுடன், ஒரு ஆண்டு வரை எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம்.மலேரியாவால், 2022ம் ஆண்டில், 354 பேர்; 2023ம் ஆண்டில் 384 பேர்; கடந்த ஆண்டில், 347 பேர் பாதிக்கப்பட்டனர். இந்த ஆண்டில் இதுவரை, 20க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு உள்ளனர். உயிரிழப்புகள் இல்லை. ஆனால், இந்த ஆண்டுக்குள் மலேரியா நோயை ஒழிக்க இலக்கு நிர்ணயித்து பணியாற்றி வருகிறோம்.கடந்த ஆண்டை விட, பாதிக்கப்படுவோர் எண்ணிக்கையை கட்டுப்படுத்துவதுடன், அடுத்த ஓரிரு ஆண்டுகளில், மலேரியா இல்லாத மாநிலமாக தமிழகம் மாற்றப்படும். ஏற்கனவே, தமிழகத்தில் பெரியம்மை, போலியோ, இளம்பிள்ளைவாதம், ரண ஜன்னி, நரம்பு சிலந்தி நோய், பரங்கிப்புண் போன்ற நோய்கள் ஒழிக்கப்பட்டுள்ளன. அந்த வரிசையில் மலேரியாவும் முற்றிலும் ஒழிக்கப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.