உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / அதிகாலையிலேயே டாஸ்மாக் திறப்பு வடப்பெரும்பாக்கத்தில் விபத்து அதிகரிப்பு

அதிகாலையிலேயே டாஸ்மாக் திறப்பு வடப்பெரும்பாக்கத்தில் விபத்து அதிகரிப்பு

சென்னை, வடப்பெரும்பாக்கத்தில் அதிகாலையில் டாஸ்மாக் மதுக்கடை திறக்கப்படுவதால், மோசமான மாதவரம் நெடுஞ்சாலையில், 'குடி'மகன்கள் விபத்தில் சிக்குவது அதிகரித்துள்ளது. சென்னை - கோல்கட்டா தேசிய நெடுஞ்சாலையில், வடகரை சந்திப்பில் துவங்கும் மாதவரம் நெடுஞ்சாலையின் ஒருபகுதி வடக்கு உள்வட்ட சாலையில், மஞ்சம்பாக்கம் அருகே இணைகிறது. இது 7 கி.மீ., துாரம் கொண்டது. இந்த சாலையில், மூன்று மாதங்களாக நகராட்சி நிர்வாகத் துறை வாயிலாக பாதாள சாக்கடை குழாய் பதிப்பு, சென்னை குடிநீர் குழாய் பதிப்பு, மழைநீர் கால்வாய் கட்டுமானம் பணிகள் ஒரே நேரத்தில் நடந்து வருகிறது. இதனால், சாலை சின்னாபின்னமாக மாறியுள்ளது. மேலும், சென்னை - கொல்கட்டா தேசிய நெடுஞ்சாலை மற்றும் வடக்கு உள்வட்ட சாலையில் இருந்து வரும் கனரக கன்டெய்னர் வாகனங்கள், எண்ணெய் டேங்கர் லாரிகள் அதிகளவில் பயணித்து வருகின்றன. இச்சாலையில் சென்னை மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட வடப்பெரும்பாக்கத்தில், அதிகாலை 4:00 மணி முதல் டாஸ்மாக் மதுக்கடை திறக்கப்படுகிறது. நள்ளிரவு 12:00 மணி வரை கடை இயங்குகிறது. கடை திறக்கப்பட்டுள்ளதை அறிந்து, செங்குன்றம், புழல், வடகரை, காவாங்கரை, கிராண்ட்லைன், புள்ளிலைன், மஞ்சம்பாக்கம், கொசப்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த மதுப்பிரியர்கள் அங்கு சென்று, மதுக்களை வாங்கி செல்கின்றனர். மேலும், அவ்வழியாக செல்லும் சரக்கு வாகன ஓட்டிகளும் மதுக்களை வாங்கி செல்கின்றனர். சாலை சேதம் அடைந்துள்ள நிலையில், அங்கு மின்விளக்கு வசதியும் இல்லை. இதனால், இருசக்கர வாகனங்களில் செல்லும் மதுப்பிரியர்கள், விபத்தில் சிக்கி வருகின்றனர். எனவே, விபத்துகளுக்கு வழிவகுக்கும் மதுக்கடையை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ