தொடரும் வெடிகுண்டு மிரட்டல் சென்னை ஐகோர்ட்டில் பதற்றம்
சென்னை, சென்னை உயர் நீதிமன்றத்திற்கு, ஆறாவது முறையாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம், பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள உரிமையியல் நீதிமன்றத்தில், '4 ஆர்.டி. எக்ஸ்.,' வெடிகுண்டு வைக்கப்பட்டு உள்ளதாக, நேற்று காலை 8:00 மணிக்கு டி.ஜி.பி., அலுவலகத்திற்கு இ - மெயிலில் மிரட்டல் கடிதம் வந்துள்ளது. இதையடுத்து, காலை 11:00 மணி முதல், சென்னை சிட்டி சிவில் நீதிமன்றம், முதன்மை அமர்வு நீதிமன்ற வளாகம், சி.பி.ஐ., நீதிமன்றங்கள், விசாரணை அறைகள் என, உயர் நீதிமன்ற வளாகம் முழுதும் போலீசார், மோப்ப நாய் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் உதவியுடன், இரண்டு மணி நேரத்திற்கும் மேல் தீவிர சோதனை மேற்கொண்டனர். வளாகம் முழுதும் சோதனையில் ஈடுபட்ட போலீசார், நீதிமன்றத்தில் உள்ள 'சிசிடிவி' கேமரா பதிவுகளையும் ஆய்வு செய்தனர். ஆனால், சோதனையில் எந்த வெடிபொருட்களும் சிக்கவில்லை என, போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவம், நீதி மன்ற ஊழியர்கள் மற்றும் பொது மக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தியது. இதுவரை, உயர் நீதி மன்றம் மற்றும் அதே வளாகத்தில் உள்ள சி.பி.ஐ., நீதிமன்றம், உரிமையியல் நீதிமன்றம் என, ஆறாவது முறையாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
கனிமொழி எம்.பி.,
பெயரில் மிரட்டல்
கிண்டி கவர்னர் மாளிகை அலுவலகத்திற்கு, நேற்று முன்தினம் இரவு 9:50 மணியளவில், தி.மு.க., - எம்.பி., கனிமொழி பெயரில் 'இ - மெயில்' ஒன்று வந்துள்ளது. அதில், கவர்னர் மாளிகை, நடிகர் எஸ்.வி.சேகர் வீடு, டி.ஜி.பி., அலுவலகத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது. வெடிகுண்டு நிபுணர்களின் இரண்டு மணி நேர சோதனையில், மிரட்டல் வெறும் புரளி என்பது தெரியவந்தது. போலி இ - மெயில் ஐ.டி.,யை பயன் படுத்தி, மிரட்டல் விடுத்தது யார், எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது குறித்து, சைபர் கிரைம் போலீசார் விசாரிக்கின்றனர்.