செம்மஞ்சேரியில் பயங்கரவாதி என்.ஐ.ஏ., அதிகாரிகள் விசாரணை
சென்னை: செம்மஞ்சேரியில், கட்டட தொழிலாளி போல பதுங்கி இருந்த, வங்கதேச பயங்கரவாதி அபு சலாம் அலி செயல்பாடுகள் குறித்து, என்.ஐ.ஏ., அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.பாகிஸ்தானில் ஆயுத பயிற்சி பெற்ற, அன்சருல்லா பங்களா டீம் மற்றும் ஜமாத் - உல் முஜாஹிதீன் அமைப்புகளை சேர்ந்த பயங்கரவாதிகள், இந்தியாவின் பல பகுதிகளில் ஊடுருவி உள்ளனர். இவர்கள், இந்தியா, பாகிஸ்தான் மற்றும் வங்க தேசத்திலும் பயங்கரவாத செயலில் ஈடுபட்டு வருகின்றனர்.வங்கதேச பயங்கரவாதிகள் என்று அழைக்கப்படும் இவர்களை, 'ஆப்பரேஷன் ப்ரகத்' என்ற அதிரடி நடவடிக்கை வாயிலாக, எஸ்.டி.எப்., எனப்படும் அசாம் மாநில சிறப்பு அதிரடிப்படை போலீசார் வேட்டையாடி வருகின்றனர்.கடந்த, 12ம் தேதி, சென்னை செம்மஞ்சேரி பதுங்கி இருந்த, வங்கதேச பயங்கரவாதி அபு சலாம் அலி, 37 என்பவரை கைது செய்து, அசாம் மாநிலத்திற்கு அழைத்துச் சென்றனர்.இவர், எதற்காக செம்மஞ்சேரி பகுதியை தேர்வு செய்தார். அபு சலாம் அலி கூட்டாளிகள் தமிழகத்தில் பதுங்கி உள்ளனரா என்பது குறித்து, என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.அவர்கள் கூறியதாவது:கடந்த, 2019ல் சவுதி அரேபியாவில் வேலை பார்த்து வந்த, தமிழகத்தைச் சேர்ந்த, 14 பேர், அன்சருல்லா பயங்கரவாத அமைப்புக்கு நிதி திரட்டி வந்தனர். அப்போது, இவர்கள் நாடு கடத்தப்பட்டு, தமிழகம் வந்ததும் கைது செய்யப்பட்டனர். இவர்கள், தகவல் பரிமாற்றத்திற்கு சங்கேத மொழியை பயன்படுத்தி வந்தனர்.அதே பாணியைதான் அபு சலாம் அலியும் பயன்படுத்தி உள்ளார். இவர், செம்மஞ்சேரி பகுதியில், அரசன்கழனி என்ற இடத்தில், கட்டட தொழிலாளி போல பதுங்கி இருந்தார். இவர் தயாரித்து வைத்திருந்த கொலை பட்டியலில், தமிழகத்தைச் சேர்ந்த ஹிந்து தலைவர்கள் பெயர்கள் இடம் பெற்றுள்ளன. நாடு முழுதும் அன்சருல்லா மற்றும் ஜமாத் உல் முஜாஹிதீன் அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதிகளை ஒருங்கிணைக்கும் பணியில் ஈடுபட்டார்.இவர், செம்மஞ்சேரி பகுதிக்கு எப்போது வந்தார், யாரையெல்லாம் சந்தித்தார், எந்தெந்த இடங்களுக்குச் சென்றார் என்பது குறித்து விசாரித்து வருகிறோம். சில இடங்களில், அபு சலாம் அலி குறித்த, 'சிசிடிவி' காட்சிகள் கிடைத்துள்ளன. அதன் அடிப்படையிலும் விசாரணை நடக்கிறது.இவ்வாறு அவர்கள் கூறினர்.