மூடுகால்வாய் கட்டியும் மழைநீர் தேங்கி பாதிப்பு
சேலையூர் :சேலையூர் அடுத்த வேங்கைவாசலில், மழைக்காலத்தில் தேங்கும் தண்ணீர், சாலையோர கால்வாய் வழியாக, 'டாஸ்மாக்' கடை அருகே உள்ள சிறுபாலத்தில் சென்று, சித்தேரி ஏரியை அடைகிறது.இந்த கால்வாய் போதிய அகலத்தில் இல்லாததால், ஒவ்வொரு மழைக்கு தண்ணீர் சீராக செல்லாமல், அப்பகுதியில் 4 அடி உயரத்திற்கு வெள்ளம் தேங்குகிறது. இதனால், போக்குவரத்து தடைபட்டு மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.பல ஆண்டுகளாக நீடித்து வந்த இப்பிரச்னைக்கு தீர்வாக, சிறுபாலம் வழியாக வரும் தண்ணீர் தடையின்றி சித்தேரிக்கு செல்லும் வகையில், 6 கோடி ரூபாய் செலவில், 300 மீட்டர் துாரத்திற்கு, கடந்த ஆண்டு மூடுகால்வாய் கட்டப்பட்டது.இக்கால்வாய் 8 அடி உயரம், 14 அடி அகலத்தில் கட்டப்பட்டு, 'டாஸ்மாக்' கடை அருகே சிறுபாலத்துடன் இணைக்கப்பட்டு உள்ளது. ஆனால், சிறுபாலம் வழியாக வரும் தண்ணீர் மூடுகால்வாய்க்குள் செல்ல பாதை ஏற்படுத்தவில்லை.இதனால், கடந்த மழையின்போது, வேங்கைவாசல் பிரதான சாலையில் மீண்டும் வெள்ளம் தேங்கியது. பொதுமக்கள் எதிர்ப்பு காரணமாக, தண்ணீரை வடியவைக்க, கால்வாயில் இரண்டு அடி அகலத்தில் துளையிட்டு பாதை ஏற்படுத்தினர். பின், நிரந்தர பாதை ஏற்படுத்தவில்லை.தென்மேற்கு பருவமழை அடுத்த மாதம் துவங்கவுள்ள நிலையில், மீண்டும் வெள்ளம் பாதிப்பு ஏற்படாமல் இருக்க, மூடுகால்வாயில் தண்ணீர் வடிவதற்கு ஏற்ப பாதை அமைக்க வேண்டும் என, பகுதிவாசிகள் எதிர்பார்க்கின்றனர்.