உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / சிந்தாதிரிபேட்டையில் புது மீன் அங்காடி கட்டி மக்களின் வரிப்பணத்தை வீணடித்த மாநகராட்சி

சிந்தாதிரிபேட்டையில் புது மீன் அங்காடி கட்டி மக்களின் வரிப்பணத்தை வீணடித்த மாநகராட்சி

சென்னை, சிந்தாதிரிப்பேட்டையின் அடையாளமாக, பழமையான மீன் அங்காடி பயன்பாட்டில் உள்ள நிலையில், மக்கள் நடமாட்டமே இல்லாத பகுதியில் பல லட்சம் ரூபாய் செலவில் நவீன மீன் அங்காடி அமைத்து, மக்கள் வரிப்பணத்தை மாநகராட்சி வீணடித்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சிந்தாதிரிப்பேட்டை, அருணாச்சலம் சாலையில் உள்ள மீன் அங்காடி, 100 ஆண்டுகள் பழமையானது. இங்கு, சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த மீன் வியாபாரிகள், மொத்த வியாபாரிகளிடம் கொள்முதல் செய்து, அவரவர் பகுதியில் சில்லரை வியாபாரம் செய்து வருகின்றனர். இந்த அங்காடியை நம்பி, 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள், தினமும் பிழைப்பு நடத்தி வருகின்றன. மெரினா லுாப் சாலையில் மீன் விற்பனையில் ஈடுபடுவோரும், சிந்தாதிரிப்பேட்டை பழைய மீன் அங்காடியில் மீன் வாங்கிச் சென்று விற்கின்றனர். இந்த மீன் அங்காடியை, காங்கிரஸ் முன்னாள் எம்.பி.,யான ஜெ.எம்.ஹாரூன், ஒன்பது ஆண்டுகளாக சிறந்த முறையில் நடத்தி வருகிறார். இந்நிலையில், சிந்தாதிரிப்பேட்டை மேற்கு கூவம் சாலையில் பூங்கா ரயில் நிலையம் அருகே, சிங்கார சென்னை - 2.0 திட்டத்தின் கீழ், பல லட்சம் ரூபாய் செலவில், 82 கடைகளுடன் கூடிய நவீன மீன் அங்காடியை, மாநகராட்சியினர் அமைத்தனர். இதை, கடந்த ஆண்டு மே, 7ம் தேதி சேப்பாக்கம் எம்.எல்.ஏ.,வும் துணை முதல்வருமான உதயநிதி திறந்து வைத்தார். புதிதாக திறக்கப்பட்ட மீன் அங்காடியில் போதிய வசதிகள் இல்லாதது, மிகவும் சிறிய அளவிலேயே கடைகளை அமைத்தது போன்ற காரணங்களால், பழைய மீன் அங்காடி வியாபாரிகள், புதிய அங்காடிக்கு வர விருப்பம் தெரிவிக்கவில்லை. புதிய மீன் அங்காடியில், சில வியாபாரிகள் கடைகளை நடத்தினாலும், மீன் வாங்க அதிகளவில் மக்கள் வராததால், அவர்கள் நஷ்டம் அடைந்தனர். அதனால் வியாபாரிகள், அருணாசலம் சாலையில் உள்ள பழைய மீன் அங்காடியிலேயே, தங்களது வியாபாரத்தை தொடர்கின்றனர். மீன் வாங்குவோர் கூறியதாவது: பழைய மீன் அங்காடியில், ஒவ்வொரு கடை முன்னும் மீன் வகைகள் வரிசையாக வைக்கப்படும். தேவையானவற்றை வாங்கி, கடையை ஒட்டியுள்ள மீன் வெட்டுவதற்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் உள்ளோரிடம் கொடுத்து, துண்டு துண்டாக வெட்டி வாங்கி கொள்வோம். தவிர, ஆங்காங்கே கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன. இது, வியாபாரிகளுக்கு மட்டுமின்றி மீன் வாங்க வருவோருக்கும் உபயோகமாக உள்ளது. ஆனால் புதிதாக அமைக்கப்பட்ட மீன் அங்காடியில், போதிய வசதிகள் இல்லை. குறிப்பாக, மக்கள் நடமாட்டமே இல்லாத பகுதியில் புதிய அங்காடி இருப்பதால், அங்கு செல்ல யாரும் ஆர்வமும் காட்டுவதில்லை. பழைய மீன் அங்காடி பயன்பாட்டில் உள்ள நிலையில், புதிதாக அங்காடி அமைத்து, மக்களின் வரிப்பணத்தை, மாநகராட்சி வீணடித்துள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர். பழைய மீன் அங்காடி வியாபாரிகள் கூறியதாவது: பழைய மீன் அங்காடியில், விற்பனைக்கான கொண்டுவரப்படும் மீன் பெட்டிகளை பாதுகாப்பாக வைத்து விட்டு பூட்டிச் செல்லலாம். மேலும், வியாபாரம் செய்வதற்கென ஒவ்வொரு கடை முன்புறமும் விசாலமான இடம் உள்ளது. அனைத்து இடங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. அவற்றை கண்காணிப்பதற்கும், சுழற்சி முறையில் ஆட்கள் போடப்பட்டுள்ளதால், திருட்டு பயம் இல்லாமல் வியாபாரம் செய்ய முடிகிறது. ஆனால், புதிய மீன் அங்காடியில் இதுபோன்ற வசதிகள் இல்லை. இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி