வாசகர்கள் கருத்துகள் ( 1 )
Similarly in Narayanapuram lake, so much of weeds. We started seeing in a small part but today the entire lake is covered with weed. The authorities do not bother at all. Or possibly, on record, it has been removed already
ஆலந்துார் :போரூர் ஏரியின் உபரிநீர் செல்லும் போக்கு கால்வாயில் ஆக்கிரமிப்புகள் அதிகரித்து வருவதை, நீர்வளத்துறை அகற்றாமல் வேடிக்கை பார்த்து வருவதால், ஆலந்துார் மண்டலத்தின் பெரும்பாலான பகுதிகள், பருவ மழைக்காலத்தில் வெள்ளத்தில் மூழ்கி தீவாக மாறும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அரசுக்கு பெரும் நெருக்கடியாக அமையும் என்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என, அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.சென்னை மாநகராட்சி எல்லை விரிவாக்கத்தின்போது, ஆலந்துார் நகராட்சியுடன், மணப்பாக்கம், மதனந்தபுரம், முகலிவாக்கம், நந்தம்பாக்கம், மீனம்பாக்கம் ஆகியவை சேர்க்கப்பட்டு, ஆலந்துார் மண்டலமாக உருவாக்கப்பட்டது.இந்த மண்டலத்தில் அடையாறு கால்வாய், மணப்பாக்கம் கால்வாய், நந்தம்பாக்கம் கால்வாய், வீராங்கால் ஓடை ஆகியவை முக்கிய நீர்வழிப்பாதைகளாக உள்ளன.பருவமழைக்காலத்தில் ஆலந்துார், ஆதம்பாக்கம், நங்கநல்லுார், பழவந்தாங்கல் ஆகிய பகுதிகளில் மழைநீர் தேங்குகிறது. அதேபோல் முகலிவாக்கம், மதனந்தபுரம், மணப்பாக்கத்தில் பகுதிகளில் உள்ள ஆயிரக்கணக்கான குடியிருப்புகளில் அதிகளவில் வெள்ளம் சூழ்ந்து பாதிப்பு ஏற்படுவது வாடிக்கையாக இருக்கிறது.ஒவ்வொரு பருவமழைக்கும், 4 அடி உயரத்திற்கு தண்ணீர் தேங்குவதால், வீடுகளை விட்டு வெளியேற முடியாமல், மக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.இப்பகுதிகளை வெள்ளம் சூழ்வதற்கு, போரூர் ஏரியில் இருந்து உபரிநீர் செல்லும் போக்கு கால்வாய் ஆக்கிரமிப்பே காரணம் என, இப்பகுதியினர் சுட்டிக்காட்டுகின்றனர்.போரூர் ஏரியின் சிறிய மதகில் இருந்து வெளியேறும் உபரிநீர், கெருகம்பாக்கம், கொளப்பாக்கம், மதனந்தபுரம், முகலிவாக்கம், மணப்பாக்கம் வழியாக அடையாறு ஆற்றில் கலக்கிறது. இந்நீர் செல்லும் பாதையாக மணப்பாக்கம் கால்வாய் உள்ளது.இக்கால்வாய், 16 கி.மீ., நீளம்; 18 முதல் 25 அடி அகலம் என, வருவாய் துறை ஆவணங்களில் உள்ளது. ஆனால், மதனந்தபுரம், முகலிவாக்கம், மணப்பாக்கம் பகுதியில், ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் சிக்கி சுருங்கி, 5 - 7 அடி அகலம் மட்டுமே கால்வாய் உள்ளது.கடந்த, 2016ம் ஆண்டில் போக்கு கால்வாயின் சில பகுதிகள், கான்கிரீட்டால் கட்டமைக்கப்பட்டன. அப்போது, ஆக்கிரமிப்பு அகற்றப்படாமல் கட்டியதால், ஏரி உபரிநீர் போக்கு கால்வாய் சில பகுதி குறுகலாகவும், சில பகுதி அகலமாகவும் உள்ளது.குறிப்பாக, முகலிவாக்கத்தில் துவங்கி அடையாறு ஆறு வரை, 4 கி.மீ., வரை உள்ள கால்வாயில், 60 சதவீதம் ஆக்கிரமிப்புகள் உள்ளன. இதனால், போரூர் ஏரி உபரிநீர் வெளியேறுவதில் போதிய வழி இல்லாததால், ஆயிரக்கணக்கான குடியிருப்புகளில் புகுந்து பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.இந்நிலையில், போரூர் ஏரியில் இருந்து மதனந்தபுரம் சாலை வழியாக நந்தம்பாக்கம் ஓடையில் இணைக்கும் வகையில், 100 கோடி ரூபாயில் கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. இதனால், கடந்த ஆண்டு பாதிப்பு சற்று குறைந்தது. அதேநேரம், மணப்பாக்கம் கால்வாயில் சில இடங்களில் மட்டும் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது; பெரிதாக நீர்வளத்துறை கண்டுகொள்ளவேயில்லை. இதனால், கால்வாயின் பல பகுதிகளில் குப்பை, பிளாஸ்டிக் மற்றும் கட்டடக்கழிவுகள் உள்ளிட்ட தேவையற்ற பொருட்கள் கொட்டப்படுகின்றன.மேலும், இப்பகுதியில் பாதாள சாக்கடை திட்டம் செயல்பாட்டில் இல்லாததால், பெரும்பாலான குடியிருப்புகளின் கழிவுநீர், கால்வாயில் வெளியேற்றப்படுகிறது. கால்வாயை துார்வாராததால், ஏராளமான சகதி சேர்ந்து, செடி, கொடிகள் நீரோட்டத்திற்கு தடையாக உள்ளன.இதனால், இந்தாண்டு பருவமழையின்போது, போரூர் ஏரியின் உபரிநீர் செல்ல வழியின்றி, குடியிருப்புகளில் சூழம் நிலை உள்ளது.எனவே, வரும் பருவமழைக்குள் போக்கு கால்வாயை சீரமைத்து உபரிநீர், மழைநீர் எளிதாக செல்ல வழி செய்ய வேண்டும் என, பகுதிமக்கள் எதிர்பார்க்கின்றனர்.சீரமைப்பு நடக்கிறதுபோரூர் ஏரியில் இருந்து உபரிநீர் செல்வதற்கு ஏற்ப, மணப்பாக்கம் கால்வாய், மதனந்தபுரத்தில் மற்றொரு கால்வாய் அமைக்கப்பட்டு உள்ளது. தவிர, முகலிவாக்கம் பகுதி போக்கு கால்வாயில் சிறு பாலங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. அப்பணி முடிந்தவுடன், கால்வாய் துார் வாரி சீரமைக்கப்படும். தவிர, கால்வாயின் தாழ்வான பகுதிகள் அடையாளம் காணப்பட்டு, ஏழு கோடி ரூபாயில் இருபக்கமும் தடுப்பு சுவர் உயர்த்தப்படும். இந்நடவடிக்கையால், இந்தாண்டு மழை வெள்ள பாதிப்பு ஏற்படாது.- நீர்வளத் துறை அதிகாரிகள்நீரோட்டம் தேவைகடந்த, 2015ம் ஆண்டு ஏற்பட்ட பாதிப்பை உணர்ந்து, கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்றி, துார்வாரி ஆழப்படுத்தி, பக்கவாட்டு சுவர் அமைத்திருந்தால், இப்பிரச்னைக்கு தீர்வு கிடைத்திருக்கும். இந்தாண்டு அதுபோல் இல்லாமல், போக்கு கால்வாய் ஆக்கிரமிப்பை பாரபட்சமின்றி முழுமையாக அகற்ற வேண்டும். நீரோட்டத்திற்கு தடை இல்லாதவாறு ஏற்பாடு செய்ய வேண்டும்.- ஆலந்துார் குடியிருப்போர் நலச்சங்கங்கள்
Similarly in Narayanapuram lake, so much of weeds. We started seeing in a small part but today the entire lake is covered with weed. The authorities do not bother at all. Or possibly, on record, it has been removed already