உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / வித்தியாச வாசிப்பு நர்மதாவின் அடையாளம்

வித்தியாச வாசிப்பு நர்மதாவின் அடையாளம்

தனித்துவமான வயலின் வாசிப்பில் ஒருவராக திகழ்பவர் நர்மதா. இவரது இசை கச்சேரி, ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள சிருங்கேரி மடத்தில் நிகழ்ந்தது.முதலில், தர்பார் ராகத்தில் அமைந்த வர்ணத்தை இசைத்தார். அடுத்தபடியாக 'கம் கணபதே' என்ற ஹம்ஸத்வனி ராகம், ஆதி தாளம், திஸ்ர நடையில் அமைந்த கீர்த்தனையை இசைத்து, விநாயக பெருமானை போற்றி வணங்கினார். முதல் வரிகளுக்கே, கற்பனை ஸ்வரமும் இசைத்தார்.பின், கவுளி பந்து ராகம், ஆதி தாளத்தில் அமைந்த தியாகராஜர் இயற்றிய 'தெரதியகராதா' கீர்த்தனையை இசைத்தார்.தொடர்ந்து, கதனகுதுாகலம் எனும் ராகத்தில், பட்டணம் சுப்பிரமணிய அய்யர் இயற்றிய, ஆதி தாளத்தில் அமைந்த 'ரகுவம்சசுதா' கீர்த்தனையை இசைத்து குதுாகலப்படுத்தினார். துரித காலப்பிரமாணத்தில் வித்தியாசமான முறையில் வாசித்து, தன்னை தனித்து அடையாளப்படுத்தி கொண்டார்.பின், பூர்வ கல்யாணி ராகத்தை ஆலாபனை செய்தார். இந்த ராகத்தில், நீலகண்ட சிவன் இயற்றிய ரூபக தாளத்தில் அமைந்த 'ஆனந்த நடமாடுவார் தில்லை' பாடலை இசைத்து, நடராஜ பெருமானை கண் முன் நிறுத்தினார். இதில் இசைத்த கற்பனை ஸ்வரங்கள் அருமை.கச்சேரியின் முக்கிய பகுதியாக, கல்யாணி ராகத்தில், ராகம், தானம், பல்லவியை இயற்றி அரங்கேற்றினார்.முதலாவதாக, கல்யாணி ராகத்தை ரசிக்கும்படியாக ஆலாபனை செய்தார். இந்த ராகத்தை ஹிந்துஸ்தானி மற்றும் வெஸ்டர்ன் இசை முறையில் இசைத்து, கைதட்டல் பெற்றார்.இந்த ராகத்தில் 'ஹரே ராம கோவிந்த முராரே' என துவங்கும் பல்லவியை பாடி, பின் இசைத்தார். இதை தொடர்ந்து, இப்பல்லவியை கானடா, நளினகாந்தி, த்விஜாவந்தி, ஹம்சாநந்தி போன்ற ராகங்களில் இசைத்து மகிழ்வித்தார். நிறைவாக இசைத்த கோர்வை கம்பீரமாக அமைந்தது.தனி ஆவர்த்தனத்தில் வித்தியாசமான வாசிப்பால், ஒவ்வொரு முறையும் கைத்தட்டல் பெற்றார் குருபிரசாத். அதேபோல், கடத்தில் ராமதாஸ் வாசிப்பும் மெச்சும்படி அமைந்தது.அடுத்தபடியாக பாரதியார் இயற்றிய ஜோன்புரி ராகத்தில் அமைந்த 'பாருக்குள்ளே நல்ல நாடு' என்ற பாடலை இசைத்து, தேச பக்தியை ஊட்டினார். இசை துறையில் நீண்ட பங்களிப்பை வழங்கி வரும் இவருக்கு பெருமை சேர்க்கும்விதமாக, அரங்கத்தில் பலத்த கைத்தட்டல் எழுந்தது.-சத்திரமனை ந.சரண்குமார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை