உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / சகதியாக மாறிய லாரிகள் நிறுத்த வளாகம் அலட்சியம் காட்டும் மாநகராட்சியால் ஆபத்து

சகதியாக மாறிய லாரிகள் நிறுத்த வளாகம் அலட்சியம் காட்டும் மாநகராட்சியால் ஆபத்து

மாதவரம், சென்னை, மாதவரம் புறநகர் பேருந்து நிலையம் அருகே, தமிழக அரசால், 1992ல், 86 ஏக்கர் பரப்பளவில், சென்னை பெருநகர லாரிகள் நிறுத்த வளாகம் உருவாக்கப்பட்டது. இங்கு, 300க்கும் மேற்பட்ட தனியார் சரக்கு லாரிகளுக்கான முன்பதிவு அலுவலகங்கள் உள்ளன. மேலும், தேசிய சிறுதொழில் வளர்ச்சி கழகம், மத்திய சேமிப்பு கழகம், கிடங்குகள், மின்வாரிய அலுவலகம் உள்ளிட்ட பல உள்ளன.இங்கு ஏற்றுமதி, இறக்குமதிக்காக, தமிழகம் மட்டுமின்றி, அண்டை மாநிலங்களில் இருந்தும், தினமும் குறைந்தபட்சம், 300 முதல் அதிகபட்சம், 600 லாரிகள் வரை வந்து செல்கின்றன. இதன் வாயிலாக தினமும், 10,000 பேர் வேலைவாய்ப்பை பெறுகின்றனர். ஆனால் இங்கு அடிப்படை வசதிகள் படுமோசமாகி கிடக்கிறது. வளாகத்தின், 80 அடி சாலையும், அதைச் சுற்றியுள்ள 10 அடி இணைப்பு சாலைகளும் கந்தல் கோலமாகியுள்ளன.

கிரேன் உதவியுடன்

இங்கு, குடிநீர் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் மேற்கொண்ட பணியால், சாலைகள் சேறும் சகதியுமாக மாறியுள்ளன. பல இடங்களில் லாரி கூட செல்ல முடியாத அளவுக்கு பள்ளமாகி உள்ளது. பல இடங்கள் புதை குழியாக மாறிவிட்டன. இதனால், சரக்கு ஏற்றி செல்லும் லாரிகள், பாதியிலேயே நிறுத்தி கிரேன் வாயிலாக, சரக்குகளை கையாளும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.மேலும், ஆங்காங்கே தேங்கியுள்ள மழைநீர், கழிவுநீராகி சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டுள்ளது. பூமிக்கு கீழே செல்ல வேண்டிய மின்சார கேபிள்கள், மின் இணைப்பு பெட்டிகளில் இருந்து, ஆபத்தான முறையில் வெளிப்புறத்தில் மரங்களுக்கு இடையே கொண்டு செல்லப்பட்டுள்ளன. இதனால் உயிர்பலி ஆபத்தும் ஏற்பட்டுள்ளது. கடந்த 15 ஆண்டுகளாக போதிய பராமரிப்பின்றி உள்ள இவ்வளாகத்தால், லாரி உரிமையாளர்கள், ஓட்டுனர் உள்ளிட்ட தொழிலாளர்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர்.பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டிய மாநகராட்சி, இந்த இடம் தமக்கு சம்பந்தமில்லாதது போல நடந்து கொள்வதாக, லாரி உரிமையாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர். ஆனால், ஒவ்வொரு ஆண்டும் சொத்து மற்றும் தொழில் வரியாக, ஒவ்வொரு அலுவலகத்திலும், 25,000 ரூபாய் வரை பெறப்படுகிறது.லோக்சபா தேர்தலுக்கு முன் சி.எம்.டி.ஏ., வாயிலாக, அடிப்படை வசதிகளை மேம்படுத்த, 30 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. அதற்கான பணிகள் ஏதும் நடந்து முடிந்தபாடில்லை.இதுகுறித்து, லாரிகள் நிறுத்த வளாக சங்கத் தலைவர் வி.ஜி.ஜெயகுமார் கூறியதாவது:வளாகம் முழுதும் சாலைகள் கந்தல் கோலமாகியுள்ளன. நடந்துகூட போக முடியாத அளவுக்கு மாறியுள்ளது. பள்ளங்கள் 6 அடிக்கு உள்ளதால், லாரிகள் செல்ல முடியாத நிலை உள்ளது. ஆங்காங்கே மின் கேபிள்கள் ஆபத்தான முறையில் உள்ளது. இங்கு இலவசமாக பார்க்கிங் செய்யலாம் என்பதால், 70 சதவீதத்திற்கு மேல் வெளி வாகனங்கள் தான் இங்கு நிறுத்தப்படுகின்றன.

பாராமுகம்

இதை கண்காணிக்க வேண்டிய மாநகராட்சியும், பாராமுகமாக உள்ளது. இதனால் எங்கள் வாகனங்களை நிறுத்த முடியவில்லை. பல முறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. இந்த வளாகத்தில் இரண்டு ஆண்டுக்கு முன் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணி துவங்கியது. இன்னும் முழுமை பெறாததால், வளாகம் முழுக்க சேறும் சகதியுமாக மாறியுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.மாநகராட்சி தரப்பில் கூறுகையில், 'குடிநீர் வாரிய பணிகள் மழையால் தாமதமாகிவிட்டது. விரைவில் பணிகளை முடித்து, சாலைகள் போடப்படும்' என்றனர்.நோய் பாதிப்புகடந்த ஐந்து ஆண்டுகளாக இங்கு வருகிறேன். அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை. லாரியை ஓட்ட முடியாத அளவுக்கு, சேறும், சகதியும் நிரம்பியுள்ளது. இறங்கி நடந்தால் சேற்றுப்புண் போன்ற நோய்களால் பாதிக்கப்படுகிறோம்.- டி.பால்ராஜ்,லாரி ஓட்டுனர், திருச்செந்துார்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ