பழுதான பாஸ்டேக் கருவியில் கட்டண வசூல் சூரப்பட்டு சுங்கச்சாவடியில் அடாவடி
சென்னை, பழுதான பாஸ்டேக் கருவிகளை வைத்து, சூரப்பட்டு சுங்கச்சாவடியில் இரண்டு மடங்கு அபராத கட்டணம் வசூலிப்பதாக புகார் எழுந்துள்ளது.நகரப்பகுதிகளுக்குள், 60 மீட்டர் சுற்றளவிற்குள் சுங்கச்சாவடிகள் இருக்ககூடாது என, மத்திய அரசு வழிமுறை வகுத்துள்ளது. ஆனால், சென்னை எல்லைக்குள் பெருங்களத்துார் - புழல் இடையே அமைக்கப்பட்டுள்ள சென்னை பைபாஸ் சாலையில், சூரப்பட்டு, வானகரம் ஆகிய இரண்டு இடங்களில் சுங்கச்சாவடிகள் உள்ளன.குறைந்த இடைவெளியில், இந்த இரண்டு சுங்கச்சாவடிகளில் அதிக கட்டணம் வசூல் செய்யப்பட்டு வருகிறது. மும்பையை பின்பற்றி இவற்றை அகற்ற வேண்டும் என, மாநில அரசு மட்டுமின்றி, பல்வேறு தரப்பினர் வாயிலாக வலியுறுத்தப்பட்டு உள்ளது. ஆனால், தேசிய நெடுஞ்சாலை ஆணையம் கண்டுக்கொள்ளவில்லை.வானகரம் மற்றும் சூரப்பட்டு சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்கும் பொறுப்பு, மும்பையை சேர்ந்த தனியார் நிறுவனங்களிடம் வழங்கப்பட்டு உள்ளது. இதில், வானகரம் சுங்கச்சாவடியில், மும்பை நிறுவனம் நேரடியாக சுங்க கட்டணம் வசூலிக்கிறது. சூரப்பட்டு சுங்கச்சாவடியில், மனிதவளம் மற்றும் பாதுகாப்பு பணி என்ற பெயரில், அப்பகுதி அரசியல்வாதிக்கு, கட்டாயத்தின் பேரில் துணை ஒப்பந்தம் வழங்கப்பட்டு உள்ளது.சுங்கச்சாவடி ஊழியர்கள் ஒரே மாதிரியான ஆடை, தொப்பி, காலணி உள்ளிட்டவற்றை அணிய வேண்டும் என, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் உத்தரவிட்டு உள்ளது. ஆனால், இந்த சுங்கச்சாவடியில், தங்கள் இஷ்டத்திற்கு ஆடை அணிந்துள்ள ஊழியர்கள், வாகன ஓட்டிகளிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வகின்றனர்.இதுதொடர்பாக, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மட்டுமின்றி, போலீசாருக்கும் பல்வேறு புகார்கள் அனுப்பபட்டு உள்ளது.இந்நிலையில், சூரப்பட்டு சுங்கச்சாவடியில் பாஸ்டேக் திட்டத்தை நிர்வகிப்பதற்கான ஒப்பந்தம், மற்றொரு நிறுவனத்திற்கு கைமாறியுள்ளது. இந்நிறுவனம் வாயிலாக, புதிதாக பாஸ்டேக் கருவிகள், சிக்னல்கள், சாப்ட்வேர் அப்டேட் செய்யும் பணிகள், இரண்டு நாட்களாக நடந்து வருகின்றன. இதனால், பழைய பாஸ்டேக் கருவிகள் முறையாக வேலை செய்யவில்லை என கூறப்படுகிறது. அந்த தகவலை மறைத்து, நேற்று அவ்வழியாக பயணித்த வாகனங்களில் உள்ள பாஸ்டேக் சிப் வேலை செய்யவில்லை என்றுக்கூறி, ரொக்கமாக இரண்டு மடங்கு அபராதம் வசூலிக்கப்பட்டது. வேறுவழியின்றி, வெளிமாநில மற்றும் மாவட்டங்களை சேர்ந்த சரக்கு வாகன ஓட்டிகள், அதை செலுத்தி சென்றனர். சிலர் சுங்கச்சாவடி ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.தேசிய நெடுஞ்சாலை ஆணைய திட்ட இயக்குனர் ரவீந்தர் ராவிடம் கேட்டபோது, 'பாஸ்டேக் கருவியில் பிரச்னை உள்ளதா என்பது குறித்து, சுங்கச்சாவடி மேலாளரிடம் விசாரிக்கப்படும்' என்றார்.