மே தின பூங்காவில் திரண்ட துாய்மை பணியாளர்கள் மீண்டும்! குண்டுக்கட்டாக கைது செய்து அப்புறப்படுத்திய போலீசார்
சென்னை: துாய்மை பணியை தனியார் மயமாக்க எதிர்ப்பு தெரிவித்து, துாய்மை பணியாளர் 400க்கும் மேற்பட்டோர் நேற்று, சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள மே தின பூங்காவில் ஒன்றுகூடி மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர். கலைந்து செல்ல மறுத்ததால், துாய்மை பணியாளர்களை போலீசார் குண்டுக்கட்டாக கைது செய்து அப்புறப்படுத்தினர். கைது செய்யப்பட்ட அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.சென்னை மாநகராட்சியில், ராயபுரம், திரு.வி.க., நகர் மண்டலங்களில் குப்பை கையாளும் பணி, தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. இதை எதிர்த்து, ஆக., 1 முதல் 13ம் தேதி வரை ரிப்பன் மாளிகையை முற்றுகையிட்டு, துாய்மை பணியாளர்கள் போராட்டம் நடத்தி வந்தனர். பொதுமக்களுக்கு இடையூறாக அனுமதி பெறாமல் பொது இடத்தில் போராட்டம் நடத்துவதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கில், சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை தொடர்ந்து, நள்ளிரவில் துாய்மை பணியாளர்களை, போலீசார் வெளியேற்றினர். துாய்மை பணியாளர்களின் பணி பாதுகாப்பு மற்றும் ஊதிய உயர்வு குறித்த வழக்கு விசாரணை, சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.இந்நிலையில், சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள மே தின பூங்காவில், 400க்கும் மேற்பட்ட துாய்மை பணியாளர்கள் நேற்று திடீரென ஒன்று கூடினர். பூங்காவில் அமர்ந்து போராட்டம் குறித்து ஆலோசித்தனர். மீண்டும் போராட்டத்தில் ஈடுபடுவதாக தகவல் வெளியானதால், அங்கு ஏராளமான போலீசார் வரவழைக்கப்பட்டனர்.பூங்காவில் திரண்டிருந்த துாய்மைப்பணியாளர்களை வெளியேறும் படி போலீசார் அறிவுறுத்தினர். ஆனால், துாய்மை பணியாளர்களை வெளியேற்ற மறுத்தனர்.இதைத்தொடர்ந்து, 400க்கும் மேற்பட்ட துாய்மை பணியாளர்களை வலுக்கட்டயமாக போலீசார் கைது செய்தனர். அடம்பிடித்தோரை குண்டுக்கட்டாக துாக்கி, கைது செய்து வாகனங்களில் ஏற்றிச் சென்றனர்.கைது செய்யப்பட்டவர்கள் கொட்டிவாக்கம், மேற்கு மாம்பலம் மற்றும் திருவான்மியூர் ஆகிய இடங்களில் உள்ள சமூக நலக்கூடங்களில் அடைக்கப்பட்டனர். கைது நடவடிக்கையின்போது ஏற்பட்ட தள்ளுமுள்ளு காரணமாக, சிலருக்கு காயம் ஏற்பட்டது. இது குறித்து, துாய்மை பணியாளர்கள் கூறியதாவது:ரிப்பன் மாளிகை முன் நாங்கள் போராட்டம் நடத்தியபோது, அந்த இடத்தில் போராடுவதை கைவிட்டு, அனுமதிக்கப்பட்ட இடங்களில் போலீசார் அனுமதியுடன் போராட்டம் நடத்திக் கொள்ளலாம் என, நீதிமன்றம் உத்தரவிட்டது.இதனால், போராட அனுமதிக்கப்படும் இடத்தில், போராட்டம் நடத்த போலீசாரிடம் அனுமதி கேட்டோம். போலீசார் அனுமதி தரவில்லை.எனவே, அடுத்து என்ன செய்வது என்பது குறித்து ஆலோசிக்கத்தான், மே தின பூங்காவில் ஒன்று கூடினோம். பொதுமக்களுக்கு யாருக்கும் எந்த தொந்தரவும் இல்லாதபோது, எங்களை காயம் ஏற்படுத்தி கைது செய்துள்ளனர். இவ்வாறு அவர்கள் கூறினர். கைதான துாய்மை பணியாளர்கள் அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.
ஒன்று கூடியது எப்படி?
ரிப்பன் மாளிகை முன் நடந்த போராட்டதைப் போல, மீண்டும் ஒரு போராட்டத்தை துாய்மைப் பணியாளர்கள் முன்னெடுக்க கூடாது என, போலீசார் தொடர்ந்து கண்காணித்து வந்தனர். ரிப்பன் மாளிகை மட்டுமின்றி, போராட்டம் நடத்தக்கூடிய பிற இடங்களிலும் கண்காணித்து வந்தனர். ஆனால், தனித்தனியாக வந்த துாய்மை பணியாளர்கள், திடீரென ஒரே நேரத்தில் மே தின பூங்காவில் ஒன்று கூடி, போலீசாரை தடுமாற வைத்தாக கூறப்படுகிறது. போராட்டம் குறித்து செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளர்கள், புகைப்பட கலைஞர்களை, பூங்காவிற்குள் அனுமதிக்காமல் போலீசார் தடுத்து நிறுத்தினர். 'கலைந்து செல்லாவிட்டால் செய்தியாளர்களையும் கைது செய்வோம்' என, போலீசார் மிரட்டினர். சில அதிகாரிகள், செய்தியாளர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றினர்.
உணவு வழங்க கருத்து கேட்பு
பணி முடிந்து செல்லும்போது உணவு வழங்கலாமா என, துாய்மை பணியாளர்களிடம், மாநகராட்சி கருத்து கேட்கிறது. சென்னை மாநகராட்சியில் துாய்மை பணியாளர்கள், மலேரியா தடுப்பு பணியாளர்கள், மூன்று ஷிப்டுகளில் பணியாற்றி வருகின்றனர். அவர்களுக்கு உணவு வழங்க, அரசு முடிவு செய்துள்ளது. துாய்மை பணியாளர்கள் பணி முடிந்து செல்லும்போது, வார்டு அலுவலகங்களில் உணவுக் கூடம் அமைத்து, அங்கே அமர வைத்து உணவு வழங்கலாம் என்றும், பணியிடத்திலேயே இடைவேளையில் தனித்தனி பார்சல்களாக வழங்கலாம் என்றும் யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. மேலும், வேலைக்கு வரும் போதே உணவு வழங்கி, பணி இடைவேளையில் சாப்பிட வைக்கலாம் அல்லது பணி முடிந்து செல்லும்போது, பார்சலாக கொடுக்கலாம் என்றும் யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இது குறித்து, துாய்மை பணியாளர்களிடம் கருத்து கேட்பு நடத்தப்பட்டு வருகிறது. இதற்கு, துாய்மை பணியாளர்கள் அளிக்கும் கருத்தின் அடிப்படையில் முடிவு செய்யப்பட உள்ளதாக, மாநகராட்சி அதிகாரிகள் கூறினர்.