கூலித்தொழிலாளியின் ரூ.1.50 லட்சம் திருட்டு
செங்குன்றம், மகளின் கல்லுாரி கட்டணம் கட்டுவதற்காக, வங்கியில் இருந்து தொழிலாளி கடன் வாங்கி வந்த 1.50 லட்சம் ரூபாயை, மர்ம நபர்கள் திருடி சென்றனர்.செங்குன்றம் அடுத்த மொண்டியம்மன் நகர் நெடுஞ்செழியன் தெருவைச் சேர்ந்தவர் சுப்ரமணி, 52; கூலித்தொழிலாளி. இவர், தன் மகளின் கல்லுாரி கட்டணத்திற்காக, நேற்று மாலை வங்கியில் இருந்து 1.50 லட்ச ரூபாய் கடன் பெற்று, வாங்கி வந்துள்ளார். அப்பணத்தை ஹீரோ ஸ்ப்ளெண்டர் பைக்கின் பாக்ஸில் வைத்த சுப்பிரமணி, செங்குன்றம் அரிசி மார்க்கெட், காமராஜர் சிலை அருகே பைக்கை நிறுத்தி, டீக்குடிக்க கடைக்கு சென்றுள்ளார்.திரும்பி வந்து பார்த்தபோது, பைக்கில் உள்ள பெட்டி திறந்திருந்தது. அதில் வைத்திருந்த பணம் மாயமாகி இருந்தது.அதிர்ச்சி அடைந்தவர், இது குறித்து செங்குன்றம் போலீசில் புகார் அளித்தார். போலீசார், கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தபோது, பைக் பெட்டியை திறந்து, இருவர் பணத்தை திருடி செல்வது தெரிய வந்தது. போலீசார் திருடர்களை தேடி வருகின்றனர்.