ரயில் நிலையங்களில் வழிப்பறி திருடர்கள் எண்ணுார், கத்திவாக்கத்தில் அட்டகாசம்
எண்ணுார், ரயில் வழித்தடத்தில், வடசென்னையின் நுழைவு வாயிலாக கருதப்படுவது, எண்ணுார், கத்திவாக்கம், விம்கோ நகர் ரயில் நிலையங்கள்.இங்கிருந்து, தினந்தோறும் ஆயிரக்கணக்கான பயணியர், மின்சார ரயிலில் கும்மிடிப்பூண்டி, எலாவூர், நெல்லுார் மற்றும் சென்ட்ரல் வழித்தடங்களில் பயணிக்கின்றனர்.இதனால், காலை மற்றும் மாலை நேரங்களில், ரயில் நிலையங்களில் பயணியர் கூட்டம் அதிகம் இருக்கும்.மேலும், சென்னை, சென்ட்ரலில் இருந்து, வடமாநிலங்களுக்கு செல்லும் விரைவு ரயில்களும் இவ்வழியே செல்கின்றன.இந்நிலையில், இரவு நேரங்களில் மின்சார ரயில்களில் வரும் பயணியரை குறி வைத்து, வழிப்பறி சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.குறிப்பாக, எண்ணுார், கத்திவாக்கம், எர்ணாவூர், பாலாஜி நகர், விம்கோ நகர் போன்ற ரயில் நிலையங்கள், அதனை ஒட்டிய பகுதிகளில் இருட்டில் பதுங்கியிருக்கும் மர்ம நபர்கள், ஆள் நடமாட்டம் குறைந்த நேரங்களில், நோட்டமிட்டு பயணியரை தாக்கி, மொபைல் போன், பணம் உள்ளிட்டவற்றை பறித்துக் கொள்கின்றனர்.தவிர, வடமாநிலங்கள் நோக்கி செல்லும் பயணியர், மொபைல் போன் சிக்னலுக்காக, படிக்கட்டு அருகே வந்து நிற்கும் போது, நடைமேடைகளில் நிற்கும் வழிப்பறி திருடர்கள், மொபைல் போனை தட்டி பறித்து செல்கின்றனர்.இதனால், மின்சார ரயில், விரைவு ரயில் பயணியர் அச்சத்தில் உறைந்து போயுள்ளனர். இது ஆங்காங்கே தொடர்கதையாக இருந்தாலும், பாதிக்கும் மேற்பட்ட சம்பவங்களில் புகார் பதிவாகாததால், இப்பிரச்னை வெளியில் தெரியாமல் உள்ளது.டிச., 12ம் தேதி, பயணியர் விரைவு ரயிலில் பயணித்த ஆந்திராவை சேர்ந்த யர்லகடே மோகனராவ், 38, என்பவரிடம், ஓடும் ரயிலில் மொபைல் போனை தட்டி பறித்து சென்ற சிறுவன் உள்ளிட்ட இருவரை, ரயில்வே போலீசார் கைது செய்தனர்.அதே போல், கத்திவாக்கம் ரயில் நிலையம் அருகே, ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில், பெண் பயணி ஒருவரை தாக்கி, பணம் பறித்த சம்பவம் அரங்கேறியது. இது குறித்து, புகார் பதிவாகவில்லை.எனவே, ரயில்வே போலீசாரும், எண்ணுார் போலீசாரும் சுதாரித்து, வழிப்பறி பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என, பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.