பூதாகரமாகும் கோலடி குப்பை பிரச்னை கழுவி ஊற்றும் திருவேற்காடுவாசிகள்
திருவேற்காடு, திருவேற்காடு நகராட்சி, 28.50 சதுர கி.மீ., பரப்பளவு கொண்டது. தினமும் 38,000 கிலோ குப்பை சேகரமாகிறது. இப்பணியில், 233 துாய்மை பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.திருவேற்காடு நகராட்சியை பொறுத்தவரை, குப்பை சேமித்து வைக்க கிடங்கு வசதி இல்லை. இதனால், திருவேற்காடு கோலடி சாலையில், திருவேற்காடு நகராட்சிக்கு சொந்தமான 4,800 சதுர அடி நிலப்பரப்பில், பல ஆண்டுகளாக குப்பை சேமித்து வைக்கப்படுகிறது. அங்கிருந்து தரம் பிரித்து, தேவையற்ற குப்பை காஞ்சிபுரம் மாவட்டம், ஆப்பூர் பகுதியில் உள்ள குப்பை கிடங்கில் கொட்டப்படுகிறது.கடந்த மூன்று ஆண்டுகளில் கொட்டப்பட்ட குப்பை, 100 மீட்டர் துாரத்திற்கு 20 அடி உயரத்திற்கு சாலை முழுதும், மலை போல் குவித்து வைக்கப்பட்டு உள்ளது. இதனால், சாலையும் பாதியாக சுருங்கி உள்ளது. குப்பை கொட்டப்பட்டுள்ள இடத்தின் நடுவே, 120 அடி உயர மின் பரிமாற்ற கோபுரம் அமைந்துள்ளது. தொடர்ந்து குப்பை கொட்டப்படுவதால், மின் கோபுரம் வலுவிழக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது. மேலும், உயரழுத்த மின்சாரம் செல்வதால், பெரும் தீ விபத்து ஏற்படவும் வாய்ப்பு உள்ளது.'கப் தாங்கல'இப்பகுதியை சுற்றி 500க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. குப்பை கிடங்கில் இருந்து வெளியேறும் துர்நாற்றத்தால், அவர்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.அடிக்கடி குப்பை எரிக்கப்படுவதால், புகை மண்டலமாகி மூச்சு திணறல், கண்ணெரிச்சல், தோல் வியாதி உள்ளிட்ட உடல் உபாதைகளால் பாதிக்கப்படுகின்றனர்.கடந்த ஆண்டு, கோலடியில் குப்பை கொட்டுவதற்கு நகராட்சி நிர்வாகம் தடை விதித்தது. இருப்பினும், தொடர்ந்து குப்பை கொட்டப்பட்டு வந்தது. இதனால் நகராட்சி நிர்வாகம், குப்பை சேகரிக்கும் தனியார் நிறுவனத்தின் ஒப்பந்தத்தை ரத்து செய்ததாக கூறப்படுகிறது. ஆனால், தற்போது வரை அங்கு குப்பை கொட்டப்பட்டு வருகிறது. மன உளைச்சல்கோலடியில் குப்பை கொட்டும் அருகே, நவீன எரிவாயு தகனமேடையும் உள்ளது. இங்கு, திருவேற்காடு, கோலடி, அயனம்பாக்கம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து உடல்கள் கொண்டு வரப்பட்டு எரிக்கப்படுகிறது. குப்பை கிடங்கால், இறுதி சடங்கு செய்ய வருவோரும் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்.இந்த நிலையில், கோலடி குப்பை பிரச்னை பூதாகரமாக வெடித்துள்ளது. சமூக ஆர்வலர்கள் பலர் குப்பை கிடங்கு அருகே நின்று வீடியோ, நகராட்சியின் அவலங்கள் குறித்து சமூக வலைதளங்களில் பதிவேற்றி பகிர்ந்து வருகின்றனர். இனியாவது நகராட்சி நிர்வாகம் விழித்துக்கொள்ள வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இது குறித்து விளக்கம் கேட்க நகராட்சி கமிஷனர் தட்சிணாமூர்த்தியை தொடர்பு கொண்டபோது, ஒருமுறை கூட அழைப்பை எடுக்கவில்லை. கடந்த டிசம்பர் மாதம் பேசும்போது, விரைவில் அங்குள்ள குப்பை முழுதும் அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
குப்பை பிரச்னைக்கு விரைவில் தீர்வு காணப்படும். கடந்த 10 நாட்களாக, புது ஒப்பந்ததாரர் வாயிலாக குப்பை அப்புறப்படுத்தும் பணி நடந்து வருகிறது. தற்போது மலை போல் குப்பை குவிந்துள்ளதால் அகற்றும் பணி சவாலாக உள்ளது. தற்போது, தினமும் 10 முதல் 15 லாரி குப்பை, கடப்பா மற்றும் அரியலுாரில் உள்ள சிமென்ட் கிடங்கிற்கும் அனுப்பும் பணி நடந்து வருகிறது. ஒரு மாதத்திற்குள், மொத்த குப்பையும் அப்புறப்படுத்தப்படும் என தெரிவித்தார்.
- அதிகாரிகள்.