உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மின்வாரியத்தால் அரசுக்கு கெட்ட பெயர் திருவொற்றியூர் எம்.எல்.ஏ., புலம்பல்

மின்வாரியத்தால் அரசுக்கு கெட்ட பெயர் திருவொற்றியூர் எம்.எல்.ஏ., புலம்பல்

மணலி: ''மின்வாரியத்தால் மட்டுமே அரசுக்கு கெட்டப்பெயர்; அதை நீக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என, திருவொற்றியூர் தி.மு.க.,- எம்.எல்.ஏ., கே.பி.சங்கர் குற்றம் சாட்டினார். மணலி மண்டல அலுவலகத்தில், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை கலந்தாலோசனை கூட்டம், கடந்த 10ம் தேதி நடந்தது. இதில், திருவொற்றியூர் தி.மு.க., - எம்.எல்.ஏ., கே.பி.சங்கர், பொன்னேரி காங்கிரஸ் எம்.எல்.ஏ., துரை சந்திரசேகர், மணலி மண்டல குழு தலைவர் ஆறுமுகம், உதவி கமிஷனர் தேவேந்திரன் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர். இதில், கவுன்சிலர்கள், ஊர் நலச்சங்கத்தினர் பங்கேற்று, தங்கள் பகுதியில் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து, அதிகாரிகளிடம் தெரிவித்தனர். நந்தினி சண்முகம், 15வது வார்டு தி.மு.க., கவுன்சிலர்: மணலிபுதுநகரில், வடிகால் பணி முடிவுற்றதால், மழைநீர் தேங்கி பாதிப்பு இருக்காது. ஆனால், கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால், பலவீனமான கரைகளால் பாதிப்பு ஏற்படும். அதை சரி செய்ய வேண்டும். இணைப்பு கால்வாய்களின் மதகுகள் எளிதில் கையாளும் வகையில் உள்ளதா என்பதை கண்காணிக்க வேண்டும். ஆற்றில் சீராக உபரி நீர் வெளியேறும் பட்சத்தில், பிரச்னை வராது. அதிகளவில் உபரி நீர் வெளியேறினால் பாதிப்பு இருக்கும். ராஜேஷ் சேகர், 21வது வார்டு அ.தி.மு.க., கவுன்சிலர்: ஜாகீர் உசேன் தெரு கால்வாய் பணிகள் முடியாததால், ஊருக்குள் மழைநீர் தேங்கி பாதிப்பு ஏற்படும். வார்டில், 50 சதவீதம் வடிகால்வாய் பணிகள் முடியவில்லை. அ.தி.மு.க., கவுன்சிலர் என்பதால், பாரபட்சம் காட்டுகின்றனர். பழுதான கம்பங்களை மாற்றாவிட்டால், சாயும் அபாயம் உள்ளது. மழைநீர் வடிகாலில் இருந்து, துார்வாரப்பட்ட மணலை மூட்டையில் கட்டி வைத்துள்ளனர். உடனடியாக அகற்ற வேண்டும். கே.பி.சங்கர், திருவொற்றியூர் தி.மு.க., - எம்.எல்.ஏ.,: பழுதான மின் கம்பங்களை உடனடியாக மாற்றும் நடவடிக்கையில் ஈடுபட வேண்டும். மின் துறையில் மட்டுமே பணிகள் தொய்வு உள்ளது. மற்றத் துறைகள் சிறப்பாக செயல்படுகின்றன. மின்வாரிய அதிகாரிகள் போன் செய்தால் எடுக்க வேண்டும். இல்லாவிடில் அரசுக்கு தான் கெட்ட பெயர் ஏற்படும். பாம்பு கடிக்கு மருந்து இல்லையா? கலந்தாலோசனை கூட்டத்தில், பொன்னேரி காங்கிரஸ் எம்.எல்.ஏ., துரை சந்திரசேகர், ''விஷ பூச்சிகள் மற்றும் பாம்பு கடிக்கு மருந்துகள் இருப்பு உள்ளதா?'' என, கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த சுகாதார துறை அதிகாரி சதீஷ், ''விஷ பூச்சிக்கான மருந்துகள் இருப்பில் உள்ளது. பாம்பு கடிக்கான மருந்துகள் மட்டும், தற்சமயம் இருப்பில் இல்லை. விரைவில் அந்த மருந்துகளும் இருப்பு வைக்கப்படும்,'' என்றார். அப்போது எம்.எல்.ஏ., துரை சந்திரசேகர், ''பருவமழையில் பாம்பு கடியால் பாதிப்பு இருக்கும். எனவே, மாலைக்குள் பாம்பு கடிக்கான மருந்துகள் இருப்பு வைக்க வேண்டும்,'' என அறிவுறுத்தினார். அதிகாரிகள் மதிப்பதில்லை திருவொற்றியூர் மண்டலத்தில், வடகிழக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்த கலந்தாய்வு கூட்டம், நேற்று முன்தினம் நடந்தது. இதில், திருவொற்றியூர் தி.மு.க., - எம்.எல்.ஏ., கே.பி.சங்கர், மண்டல குழு தலைவர் தனியரசு, பொறுப்பு மண்டல உதவி கமிஷனர் பாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். விவாதங்களுக்கு பின், திருவொற்றியூர் தி.மு.க., எம்.எல்.ஏ., கே.பி.சங்கர் பேசியதாவது: மழை காலத்தில், குடிநீர் வாரியம் போதுமான லாரி, குடிநீர் இருப்பு வைக்க வேண்டும். மின் வாரியத்தில் கீழ்மட்ட அதிகாரிகள்கூட போன் எடுப்பது கிடையாது. விபத்து ஏற்பட்டால் யார் பொறுப்பேற்பது. சில மாதங்களுக்கு முன், மின்சாரம் பாய்ந்து பள்ளி மாணவர் உயிரிழந்த சம்பவத்தில், மக்கள் பிரதிநிதிகள் மீது குற்றம் சாட்டப்பட்டது. விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது என சொல்லியும், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. அரசு அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகளை மதிக்க வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !