போலி ஆவணங்கள் தயாரித்து ரூ.2 கோடி நிலம் அபகரித்தோர் கைது
சென்னை, போலி ஆவணங்கள் தயாரித்து, 2 கோடி ரூபாய் மதிப்பிலான நிலத்தை விற்று மோசடி செய்த இருவரை, போலீசார் கைது செய்தனர். சென்னை, அடையாறு பகுதியைச் சேர்ந்தவர் ஜெயகுமார், 57. இவருக்கு, ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் மஹா கணேஷ், புண்ணியகோடி ஆகியோர் அறிமுகமாகினர். இருவரும் சேர்ந்து, பாலவாக்கம், பல்கலை நகர் முதல் குறுக்கு தெருவில், 2,400 சதுரடி இடத்தை, ஜெயகுமாரிடம் ௨ கோடி ரூபாய்க்கு விற்று, பத்திரப்பதிவு செய்து கொடுத்துள்ளனர். இதற்கிடையே, சரவணவேல் என்பவர் தன்னுடைய நிலத்தை சிலர் அபகரித்துள்ளதாக போலீசில் புகார் அளித்தார். அப்போது தான், ஏமாற்றப்பட்டது ஜெயகுமாருக்கு தெரிய வந்தது. இதையடுத்து, புண்ணியகோடி, மஹா கணேஷ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். உயர் நீதிமன்ற உத்தரவை அடுத்து, சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரித்தனர். இதில், வெள்ளனுாரைச் சேர்ந்த புண்ணியகோடி, 38, திருமுல்லைவாயிலைச் சேர்ந்த மஹாகணேஷ், 37, ஆகியோர், சரவணவேல் பெயரில் போலி ஆவணங்கள் தயாரித்து, ஜெயகுமாருக்கு நிலத்தை விற்று மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து, நேற்று இருவரும் கைது செய்யப்பட்டனர். l தேனாம்பேட்டையைச் சேர்ந்த பாரதி வேலுசாமி, 68, என்பவருக்கு ஈஞ்சம்பாக்கம் கிராமத்தில், 7,500 சதுரடி காலி மனை உள்ளது. இந்த நிலத்தை சிலர் போலியான ஆவணங்கள் தயார் செய்து அபகரித்தது தெரிந்தது. இந்த நிலத்தின் மதிப்பு 2.25 கோடி ரூபாய். இதுகுறித்து விசாரித்த போலீசார் பவர் ஏஜன்டாக பதிவு செய்து கொடுத்து மோசடியில் ஈடுபட்ட வேளச்சேரியைச் சேர்ந்த சார்லஸ் கமலேசன், 50, என்பவரை நேற்று, கைது செய்தனர். மற்றொருவரை தேடி வருகின்றனர்.