ரூ.97 லட்சம் மெட்ரோ ரயில் பொருட்கள் திருடிய மூவர் கைது
மெரினா: சென்னையில் மெட்ரோ ரயில் திட்டப்பணிகளை மேற்கொண்டு வரும் நிறுவனத்தின் நிர்வாக பிரிவில் பணி செய்து வருபவர் தனசேகர், 39. கடந்த 11ம் தேதி இரவு, மெரினா கலங்கரை விளக்கம், மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து, 97 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கட்டுமான பொருட்களை, லாரி ஓட்டுநர் அஜய் மற்றும் கிளீனர் ஆதித்யா ஆகியோரிடம் ஒப்படைத்தார். பனகல் பூங்கா மெட்ரோ திட்ட பணியிடத்திற்கு எடுத்து செல்லும்படி அறிவுறுத்தினார். ஆனால் லாரி, பனகல் பூங்கா பகுதிக்கு செல்லவில்லை; பொருட்கள் மாயமானது. இதையடுத்து தேடிய போது, கோடம்பாக்கம் மீனாட்சி கல்லுாரி அருகே லாரி மட்டும் நிற்பதும், அதில் இருந்த பொருட்கள் திருடப்பட்டதும் தெரியவந்தது. இதுகுறித்த புகாரையடுத்து, மெரினா போலீசார் விசாரித்தனர். இதில் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் அஜய் மஸி, 32, உ.பி., மாநிலத்தைச் சேர்ந்த கிளீனர் ஆதித்யா ராய், 19, மற்றும் பீஹாரைச் சேர்ந்த கோவிந்த் பஸ்வான், 42, ஆகிய மூன்று பேரை கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், மெட்ரோ ரயில் திட்டப்பணியிடத்தில் இருந்து திருட திட்டமிட்டதும், அதன்படி திருடிய பொருட்களை மதுராவாயல் பைபாஸ் மேம்பாலம் அருகே, லாரிகளில் மாற்றி வைத்திருந்ததும் தெரிந்தது. அப்பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.