லஞ்சம், வசூல் வேட்டை நடத்திய மூன்று போலீசார் ‘சஸ்பெண்ட்’
சென்னை: இருசக்கர வாகனத்தை விடுவிக்க லஞ்சம் மற்றும் பல இடங்களில் வசூல் வேட்டை நடத்தியதாக, இரு உதவி ஆய்வாளர்கள் உட்பட மூன்று போலீசாரை, சென்னை கமிஷனர் அமல்ராஜ் நேற்று, ‘சஸ்பெண்ட்’ செய்து உத்தரவிட்டார். சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராஜா; திருப்பூரில் பேக்கரி கடையில் பணிபுரிந்து வருகிறார். தனியார் நிதி நிறுவனம் மூலம் வாங்கிய இவரது இருசக்கர வாகனம், கடந்த மாதம் 11ல் திருடுபோனது. இதுகுறித்து திருப்பூர் போலீசில் புகார் அளித்திருந்தார். இந்நிலையில், சென்னை வடக்கு கடற்கரை காவல் நிலைய தனிப்படை உதவி ஆய்வாளர் சிவராஜ், 30, போலீஸ்காரர் விவேக், 35, ஆகியோர், வழக்கு ஒன்றில் தொடர்புடைய நபரை பிடிக்க, கடந்த செப்., 22ம் தேதி, திருவல்லிக்கேணி சென்றனர். போலீசார் வருவதை பார்த்து, அந்நபர் தப்பிச்சென்றார். எனினும், அவர் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் பிடிபட்டது. இதன் பதிவு எண்ணை ஆய்வு செய்தபோது, அது, திருப்பூர் ராஜாவின் வாகனம் என்பது தெரிந்தது. இதையடுத்து, ராஜாவை சென்னைக்கு வரவழைத்த இரு போலீசாரும், எழும்பூரில் நிறுத்தியிருந்த அவரது வாகனத்தை விடுவிக்க, அவரிடம் இருந்து பணப்பரிவர்த்தனை செயலியான ‘ஜிபே’ மூலம், 10 ஆயிரம் ரூபாய் லஞ்சமாக பெற்றனர். இதுகுறித்து ராஜா, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலக விஜிலென்ஸ் பிரிவில் புகாரளித்தார். விசாரணையில், போலீசார் லஞ்சம் பெற்றது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, எஸ்.ஐ., சிவராஜ், போலீஸ்காரர் விவேக் ஆகியோரை, கமிஷனர் அமல்ராஜ் நேற்று சஸ்பெண்ட் செய்தார். வசூல் வேட்டை
தமிழக காவல் துறையில் நேரடி எஸ்.ஐ.,யாக பணியில் சேர்ந்தவர் மாரீஸ்வரன், 41. இவர், இரண்டு ஆண்டுகளுக்கு முன், அண்ணா நகர் காவல் நிலையத்தில் பணிபுரிந்தார். அப்போது, லஞ்ச புகாரில் சிக்கியதால், ‘சஸ்பெண்ட்’ செய்யப்பட்டார். துறை ரீதியான விசாரணைக்குப் பின், மீண்டும் பணியில் சேர்த்து கொள்ளப்பட்டார். தற்போது, சென்னை போலீசின் மாதவரம் காவல் நிலைய குற்றப்பிரிவில் பணிபுரிந்து வந்தார். இவர் மீது, வசூல் வேட்டை, பணியில் ஒழுங்கீனம் உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் தொடர்ந்து எழுந்தன. இதையடுத்து, போலீஸ் கமிஷனர் அமல்ராஜ், மாரீஸ்வரனை நேற்று சஸ்பெண்ட் செய்தார்.