விடுதி கட்டடம் இடிக்கும் பணி இடிபாடு சிதறி மூவர் காயம்
பிராட்வே, பிராட்வே பேருந்து நிலையம் அருகே, 4 ஏக்கர் பரப்பளவில் சென்னை மருத்துவ கல்லுாரி முதுகலை மாணவர் விடுதி அமைந்துள்ளது. 65 ஆண்டு பழமை வாய்ந்த இந்த கட்டடம் பாழடைந்ததால், இரண்டு ஆண்டுகளுக்கு முன் மருத்துவ மாணவர்கள், அங்கிருந்து வேறு இடத்திற்கு மாற்றப்பட்டனர்.இதையடுத்து, அந்த கட்டடத்தை இடித்து, நீதிமன்ற வளாகம் கட்டுவதற்கான பணிகள் துவங்கின. நேற்று காலை, நான்கு அடுக்குமாடி கட்டடம் இடிக்கும் பணியில் பொக்லைன் மற்றும் கிரேன் பயன்படுத்தப்பட்டது. அப்போது, கட்டடத்தின் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்தது. கட்டட இடிபாடுகள், பிராட்வே பேருந்து நிலையம் அருகே சிதறின.இந்த விபத்தில், தி.நகரைச் சேர்ந்த விஸ்வநாதன், 65, என்பவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. மேலும், அந்த பகுதியில் காய்கறி வியாபாரம் செய்து வரும் சொக்கலிங்கம், 58, என்பவருக்கு இடது காலிலும்; லட்சுமணன், 65, என்பவருக்கு, இடது தோள்பட்டையிலும் காயம் ஏற்பட்டது. மூவரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு ராஜிவ்காந்தி மருத்துவமனையில் சேர்த்தனர்.விபத்து குறித்து பூக்கடை போலீசார் விசாரிக்கின்றனர்.