உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / புதிதாக மூன்று ரயில் பாதைகளை அமைக்க ரூ.1,270 கோடி!: ரயில் சேவையை அதிகரிக்க வாரியம் ஒப்புதல்

புதிதாக மூன்று ரயில் பாதைகளை அமைக்க ரூ.1,270 கோடி!: ரயில் சேவையை அதிகரிக்க வாரியம் ஒப்புதல்

சென்னை: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மின்சார ரயில்களின் சேவையை அதிகரிக்கும் வகையில், புதிதாக மூன்று ரயில் பாதைகளை 1,270 கோடி ரூபாயில் அமைக்க ரயில்வே வாரியம் ஒப்புதல் வழங்கியுள்ளது. அதன்படி, தாம்பரம் - செங்கல்பட்டு இடையே, 713 கோடி ரூபாயில் நான்காவது புதிய பாதை; அத்திப்பட்டு - கும்மிடிப்பூண்டி தடத்தில், 375 கோடி ரூபாயில் மூன்று, நான்காவது புதிய பாதை; அம்பத்துார் - வில்லிவாக்கம் இடையே, 182 கோடி ரூபாயில் ஐந்து, ஆறாவது புதிய பாதை பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. சென்னையில் இருந்து தாம்பரம், செங்கல்பட்டு, ஆவடி, திருவள்ளூர், அரக்கோணம், கும்மிடிப்பூண்டி, வேளச்சேரி தடங்களில் 550 மின் ரயில்களின் சேவைகள் உள்ளன. இவற்றில் தினமும் ஒன்பது லட்சத்திற்கும் மேற்பட்டோர் பயணம் செய்து வருகின்றனர். ஆனாலும், 'பீக் ஹவர்ஸ்' எனும் அலுவலக நேரங்களில் கூட்ட நெரிசலில் சிக்கி பயணியர் அவதிப்படுகின்றனர். குறிப்பாக, செங்கல்பட்டு, அரக்கோணம், கும்மிடிப்பூண்டி மின் ரயில்களில் காலை 8:30 மணி முதல் 10:00 மணி வரை, மாலை 6:00 மணி முதல் இரவு 8:30 மணி வரை, கூட்ட நெரிசல் அதிகமாக உள்ளது.போதிய அளவில் ரயில்கள் இல்லாததால், பயணியர் கூட்ட நெரிசலில் சிக்கி அவதிப்படுகின்றனர். அதுபோல், இரவு 8:30 மணிக்கு மேல், மின் ரயில்களின் சேவையும் குறைவாக இருப்பதால், பயணியர் அவதிப்படுகின்றனர். இதற்கிடையே, புறநகர் ரயில் இணைப்பை வலுப்படுத்தும் வகையில், மூன்று புதிய ரயில் பாதை திட்டங்களுக்கு, ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது.

சிக்கல்

இதுகுறித்து, தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: ரயில்களை தாமதமின்றி இயக்குவதிலும், கூடுதல் ரயில்களை இயக்குவதிலும் ரயில் பாதை மிகவும் முக்கியம். கூடுதல் ரயில்களை குறுகிய மாதங்களில் தயாரிக்க முடியும். ஆனால், புதிய ரயில் பாதைகள் அப்படி அல்ல. நிலம் கையகப்படுத்துவது, நிதி ஒதுக்கீடு போன்ற நடைமுறை சிக்கல்கள் உள்ளன. இதற்கிடையே, சென்னை ரயில்வே கோட்டத்துக்கு உட்பட்ட மூன்று புதிய திட்டங்களுக்கு, ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்தது. * தாம்பரம் - செங்கல்பட்டு இடையே, 713 கோடி ரூபாயில், 30 கி.மீ., துாரத்திற்கு நான்காவது புதிய பாதை * அத்திப்பட்டு - கும்மிடிப்பூண்டி தடத்தில், 375 கோடி ரூபாயில், 22.52 கி.மீ., துாரத்திற்கு மூன்று, நான்காவது புதிய பாதை * அம்பத்துார் - வில்லிவாக்கம் இடையே, 182 கோடி ரூபாயில், 6.4 கி.மீ., துாரத்திற்கு ஐந்து, ஆறாவது புதிய பாதை என, மொத்தம் 1,270 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கு ஒப்புதல் தரப்பட்டுள்ளது. இதையடுத்து, புதிய பாதைகள் அமைப்பதற்கான அடுத்தகட்ட பணிகளை துவங்க உள்ளோம். ரயில் பாதைக்கான வரைபடம் தயாரிப்பது, நிலம் கையகப்படுத்துவது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வோம்.

திட்ட அறிக்கை

அதேபோல், ஆவடி - ஸ்ரீபெரும்புதுார் - கூடுவாஞ்சேரி புதிய பாதை திட்டத்தின் ஒரு பகுதியாக, கூடுவாஞ்சேரி - ஸ்ரீபெரும்புதுார் - இருங்காட்டுக்கோட்டை ரயில் பாதை அமைக்கப்பட உள்ளது. அரக்கோணம் - செங்கல்பட்டு 68 கி.மீ., இரட்டை பாதை; அரக்கோணம் - ஆந்திர மாநிலம், ரேணிகுண்டா 76 கி.மீ., மூன்று, நான்காவது புதிய பாதை; கும்மிடிப்பூண்டி - ஆந்திர மாநிலம் கூடூர் 89.96 கி.மீ., மூன்று, நான்காவது புதிய பாதைகள் அமைப்பதற்கான விரிவான திட்ட அறிக்கைக்கு, ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கான நிதி ஒதுக்கும்போது, அடுத்தகட்ட பணிகளை மேற்கொள்வோம். இந்த புதிய பாதை பணிகள் முடியும்போது, மின்சார, விரைவு ரயில்களின் இயக்கம் இரட்டிப்பாகும். பெரம்பூரில் நான்காவது புதிய முனையம் அமைக்கும் பணிகள் முடியும்போது, இங்கிருந்து வெளிமாநிலங்களுக்கும், தென் மாவட்டங்களுக்கும் கூடுதலாக ரயில்களை இயக்க முடியும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Seyed Omer
டிச 30, 2025 19:39

ஆன்மீக தலமான திருச்செந்தூருக்கு சென்னையில் இருந்து ஒரே ஒரு ரயி்ல் சேவை மட்டுமே இயக்கப்படுகின்றன எனவே சென்னை திருச்சி மதுரை அருப்புக்கோட்டை தூத்துக்குடி முக்காணி ஆறுமுகநேரி காயல்பட்டினம் வழியாக திருச்செந்தூருக்கு பகல் நேர ரயி்ல் சேவை விட வேண்டு்ம் மேலும் முன்னாள் மத்திய அமைச்சருமான லல்லுபிரசாத் அறிவித்த சென்னை டு கன்னியாகுமரி கிழக்கு கடற்கரைசாலை வழியாக மகாபலிபுரம் பாண்டிச்சேரி காரைக்கால் நாகூர் அதிராம்பட்டினம் ராமநாதபுரம் கீழக்கரை ஏர்வாடி சாயல்குடி தூத்துக்குடி முக்காணி ஆறுமுகநேரி காயல்பட்டினம் திருச்செந்தூர் உடன்குடி திசையன்விளை வழியாக கண்ணியாகுமரிக்கு ரயில்பாதை என்னாச்சு


தமிழ்வேள்
டிச 30, 2025 14:11

பெரம்பூரில் ஏழு நடைமேடைகளாம் ..தற்போதுள்ள நான்கே இரண்டு சாலைகளுக்கு இடையே உள்ளது ..மீதி மூன்றை எங்கே வானத்தில் அமைப்பார்களா ? சென்ரல் -பெரம்பூர் ஐந்து கி மீ தொலைவு ..அதற்குள் எதற்கு இரண்டு டெர்மினல்கள் ? பெரம்பூருக்கு தென்சென்னை மேற்கு சென்னையிலிருந்து நல்ல சாலை வசதியே இல்லை ...இந்த டெர்மினல் அமைத்து சில்லறை அடிக்கப்போவது யார் ?


சுந்தரம் விஸ்வநாதன்
டிச 30, 2025 09:32

எல்லா விரிவாக்கம் செயலாக்கம் முன்னேற்றம் அனைத்தும் சென்னை மற்றும் சென்னையை சுற்றி மட்டுமே இருக்கணும். எந்த காரணம் கொண்டும் மற்ற ஊர்களுக்கு முன்னேற்றம் வந்துடப்படாது. அப்போதான் தென் மாவட்ட மக்கள் சென்னையை நோக்கி நெலம் நீச்சு ஆகியவற்றை வித்துபோட்டு ஓட முடியும். கேவலமான அதிகாரிகள். கேவலமான அரசாங்கம்


suren
டிச 30, 2025 14:31

சென்னை தவிர தமிழ்நாட்டில் பிற நகரங்கள் ஏன் தவிர்க்கிறார்கள்


சமீபத்திய செய்தி