திருவொற்றியூர் மாடவீதிகளில் பிரியாணி கடைகளால் அவதி
திருவொற்றியூர்: திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவில், தெற்கு மாடவீதிகளில் பெருகி வரும், பிரியாணி கடைகளால் பக்தர்கள் அவதிப்படுகின்றனர். திருவொற்றியூர், தியாகராஜ சுவாமி உடனுறை வடிவுடையம்மன் கோவில் தெற்கு மாடவீதியில், அதிகரித்து வரும் பிரியாணி மற்றும் இறைச்சி கடைகளால், மாடவீதி செல்லும் பக்தர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். மாசி பிரமோத்சவத்தின், தேரோட்டத்தின் போதும் கூட, இந்த கடைகள் அடைக்கப்படுவதில்லை. தெற்கு மாடவீதியில் தான், நகரத்தார் மண்டபமும் உள்ளது. மண்ணடி, பவளக்கார தெருவில் இருந்து, தண்டாயுதபாணி சுவாமி ஊர்வலமாக வந்து, இந்த மண்டபத்தில் அமர்ந்து, மாசி பிரமோத்சவத்தின் முக்கிய நிகழ்வான, கல்யாண சுந்தரர் திருக்கல்யாணம் காண்பது ஐதீகம். ஹிந்து அறநிலையத்துறை, மாநகராட்சி அதிகாரிகள், பழமையான ஆன்மிக நகரமாக திகழும், திருவொற்றியூரில் தியாகராஜ சுவாமி, வடிவுடையம்மன், வட்டப்பாறையம்மன் வீதிஉலா வரும், மாடவீதிகளில், இறைச்சி மற்றும் பிரியாணி கடைகளை அனுமதிக்க கூடாது. ஏற்கனவே இருக்கும் கடைகளையும், அந்த வணிகர்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில், வேறு இடங்களுக்கு மாற்றிக் கொள்ள அறிவுறுத்த வேண்டும். குறைந்தபட்சம் விழா நாட்களிலாவது இந்த கடைகள் செயல்படாமல் இருந்தால் போதும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத் துள்ளனர்.