சுங்கச்சாவடி ஊழியரிடம் போலீஸ் எனக்கூறி மொபைல் போன் பறித்தோரால் சலசலப்பு
குன்றத்துார், வண்டலுார் - மீஞ்சூர் வெளிவட்ட சாலையில், வரதராஜபுரம் பகுதியில் சுங்கச்சாவடி உள்ளது. நேற்று காலை 9:30 மணிக்கு, மாருதி ஸ்ஷிப்ட் கார் ஒன்று, சுங்கச்சாவடியை கடந்தது.அந்த காரில், 'பாஸ்ட்ராக்' இருந்ததால், தானாக ஸ்கேன் செய்து, வங்கியில் இருந்து சுங்க கட்டணம் எடுக்கப்பட்டது. அப்போது, காரில் இருந்து இறங்கிய நபர்கள், சுங்கச்சாவடி ஊழியர் இமானுவேல் என்பவரிடம், கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 'நாங்கள் காவல் துறையினர், எங்களிடம் எப்படி பணம் வசூல் செய்யலாம்' எனக் கேட்டு மிரட்டியுள்ளனர்.அதற்கு, 'பாஸ்ட்ராக் இருந்தால், தானாக பணம் எடுத்துக்கொள்ளும் என்றும், தன்னால் எதுவும் செய்ய முடியாது; வேண்டுமென்றால் மேலாளரிடம் பேசிக்கொள்ளுங்கள்' என்று, ஊழியர் இமானுவேல் கூறியுள்ளார்.ஆனால், போலீஸ் என்று கூறியவர்கள், எந்தவித பதிலும் கூறாமல், ஊழியரின் மொபைல் போனை பறித்துக்கொண்டு, குன்றத்துார் காவல் நிலையம் வந்து வாங்கிக் கொள்ளுங்கள் என, அங்கிருந்து சென்றனர்.இது தொடர்பாக விசாரித்ததில், காரில் வந்தவர்கள், குன்றத்துார் போலீசார் என்பதும், வழக்கு தொடர்பாக முடிச்சூர் வந்து, குற்றவாளியை கைது செய்து அழைத்து சென்றதும் தெரியவந்தது.போலீசார் நடந்து கொண்டவிதம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.