குவிக்கப்படும் கட்டுமான பொருட்களால் தரமணி சாலையில் போக்குவரத்து நெரிசல்
தரமணி, தரமணியில், சாலையை ஆக்கிரமித்து கட்டுமான பொருட்கள் கொட்டி வைத்துள்ளதால், கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. ஓ.எம்.ஆர்., பகுதி டைடல் பார்க், சி.எல்.ஆர்.ஐ., சாலை, தரமணி பிரதான சாலையில் பெரிய ஐ.டி., நிறுவனங்கள் உள்ளன. கிண்டி, வேளச்சேரி, நங்கநல்லுார் சுற்றுவட்டார பகுதியில் வசிப்போர், ஐ.டி., நிறுவனங்களுக்கு, தரமணி, பிள்ளையார்கோவில் தெரு வழியாக செல்கின்றனர். அதேபோல், அடையாறு, திருவான்மியூர் நோக்கி செல்வோர் மற்றும் இந்த சாலையை ஒட்டி, சென்னை ஐ.ஐ.டி., உள்ளதால், அங்கு செல்வோரும், தரமணி பிரதான சாலையை பயன்படுத்துகின்றனர். இதனால், 'பீக்ஹவர்ஸ்' எனும் அலுவலக நேரத்தில் வாகன நெரிசல் அதிகமாக இருக்கும். இருவழி பாதையான இந்த சாலையில், ஆக்கிரமிப்புகள் அதிகமாக உள்ளன. குறிப்பாக, கட்டுமான பொருட்களை சாலை மைய பகுதி வரை கொட்டி வைத்துள்ளனர். கனரக வாகனங்கள் நிறுத்தி செல்வது, தேவையில்லாத பொருட்களை அடுக்கி வைப்பது என, சாலையை ஆக்கிரமித்துள்ளனர். கட்டுமான பொருட்களை ஓரமாக கொட்டி வைக்கலாமே என வாகன ஓட்டிகள் கேட்டால், ஆக்கிரமிப்பாளர்கள் வாகன ஓட்டிகளிடம் தகராறில் ஈடுபடுகின்றனர். சாலையின் முக்கியத்துவத்தை உணர்ந்து, சாலையோர ஆக்கிரமிப்புகளை அதிகாரிகள் அகற்ற வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி வருகின்றனர்.