தடுப்பில் மோதிய மின்சார பஸ் விபத்தால் போக்குவரத்து பாதிப்பு
கொளத்துார், தடுப்பில் மோதிய மின்சார பேருந்தால், ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கிண்டி செல்லும் தடம் எண்: 170 மின்சார பேருந்து, நேற்று காலை 6:00 மணியளவில், திரு.வி.க.நகர் பேருந்து நிலையத்தில் இருந்து புறப்பட்டது. பேருந்தை முருகன் என்பவர் ஓட்டிச் சென்றார். பேருந்து கொளத்துார் மூகாம்பிகை சந்திப்பு அருகே வந்தபோது, திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலை தடுப்பு மீது மோதி நின்றது. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயமில்லை. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த செம்பியம் போலீசார் மற்றும் வில்லிவாக்கம் போக்குவரத்து போலீசார், பேருந்தை கிரேன் மூலம் அப்புறப்படுத்தினர். இந்த விபத்தால், ரெட்டேரி சந்திப்பு முதல் பெரம்பூர் வரை ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.