சென்னை : 'சட்டசபை தேர்தல் நெருங்குவதால், போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடுவோரிடம் கண்டபடி அபராதம் விதித்து, ஆளுங்கட்சிக்கு நெருக்கடியை ஏற்படுத்த வேண்டாம்' என, அரசு தரப்பில், போலீசாருக்கு கடிவாளம் போடப்பட்டுள்ளது. இதன் காரணமாக, விதிமீறி செல்வோருக்கு அபராதம் விதிக்காமல், அவர்களை ஓரிடத்தில் அமர வைத்து, சாலை விதிகளை மீறுவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து, போலீசார் பாடம் நடத்த துவங்கியுள்ளனர்.தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ளதால், அரசியல் கட்சிகள் இப்போதே, தேர்தலுக்கு தயாராகி வருகின்றன. ஆளுங்கட்சியான தி.மு.க., மீது மக்களிடம் அதிருப்தி அதிகம் உள்ளதாக, உளவுத்துறை ஆய்வு மூலம் தெரிய வந்துள்ளது.எனவே, மக்களிடம் தங்களுக்குள்ள அதிருப்தியை சரிக்கட்டும் வகையில், தி.மு.க., பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.அரசு ரீதியாக, 'உங்களுடன் ஸ்டாலின்' என்ற திட்டம் துவக்கப்பட்டு, அனைத்து துறைகளின் சேவையும் ஒரே இடத்தில் கிடைக்கும் முயற்சி நடந்து வருகிறது. இதற்காக, ஆளுங்கட்சியினர் பொதுமக்களின் வீடு தேடி சென்று வருகின்றனர்.இந்நிலையில், போக்குவரத்து போலீசார் வாகனங்களை வழிமறித்து, அபராதம் என்ற பெயரில் கண்டபடி வசூல் நடத்தி வருவதும், கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டதும், ஆளுங்கட்சிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என, முதல்வரின் கவனத்திற்கு கட்சியினர் எடுத்துச் சென்றனர்.இதையடுத்து, தேர்தல் முடியும் வரை, அபராத நடவடிக்கையை தளர்த்துமாறும், வாகன ஓட்டிகளிடம் நெருக்கடி காட்ட வேண்டாம் எனவும், வாய் மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கமிஷனர் உத்தரவு
அதை உறுதிப்படுத்தும் வகையில், சென்னை போலீஸ் கமிஷனர் அருண், சில மாதங்களுக்கு முன், போக்குவரத்து போலீசாருக்கு உத்தரவு ஒன்றை பிறப்பித்திருந்தார்.அதில், 'அதிவேகமாக வாகனம் ஓட்டுதல், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுதல், நோ - என்ட்ரியில் வாகனம் ஓட்டுதலுக்கு மட்டுமே அபராதம் விதிக்க வேண்டும்' என குறிப்பிட்டிருந்தார். போலீசாரும் அதன்படியே செயல்பட்டு வருகின்றனர்.அதேநேரம், விதிமீறல்களால் விபத்துகள் அதிகரித்து, அதுவே ஆளுங்கட்சிக்கு நெருக்கடியாக அமைந்து விடக்கூடாது என்பதால் தற்போது, விதிமீறல் வாகன ஓட்டிகளுக்கு போக்குவரத்து போலீசார், சாலை விதிகள் குறித்து விழிப்புணர்வு பாடம் நடத்தி துவங்கியுள்ளனர். சென்னை முழுதும் இந்த நடைமுறை நேற்று அமலுக்கு வந்துள்ளது.போக்குவரத்து போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:சென்னையில் போலீஸ் கமிஷனர் உத்தரவுப்படி, சில விதிமீறல்களுக்கு மட்டுமே அபராதம் விதிக்கப்படுகிறது. பல விதிமீறல்களுக்கு அபராதம் விதிப்பதில்லை.எனவே, விபத்துகள் அதிகரித்து விடக்கூடாது என்பதாலும், உயிர் பலி ஏற்படுதை தடுக்கும் வகையிலும், வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த துவங்கியுள்ளோம். மாற்றம்
அபராதம் விதிப்பதால் மட்டுமே விதிமீறல்களை தடுக்க முடியாது. மன ரீதியாக மாற்றம் வரவேண்டும். அதற்கான முயற்சி தற்போது நடந்து வருகிறது.விதிமீறலில் ஈடுபடுவோரை மிரட்டாமல், பக்குவமாக ஓரிடத்தில் அமர வைக்கிறோம். இதற்காக, முக்கிய சந்திப்புகளில் பந்தல்கள் அமைத்துள்ளோம்.குறித்த எண்ணிக்கையில் ஆட்கள் வந்ததும், விதிமீறலால் ஏற்படும் விபத்து, உயிரிழப்பு, அதன் பின்னணியில் பாதிக்கப்படும் குடும்பங்கள் பற்றி விலாவரியாக எடுத்துக் கூறுகிறோம். இதற்கு முன் நடந்த விபத்துக்கள், அதனால் அந்த குடும்பங்கள் எப்படி தவிக்கின்றன என்பதையும் சொல்கிறோம்.இந்நடைமுறை, விதிமீறல்களில் ஈடுபட்டோரிடம் நிச்சயம் மாற்றத்தை ஏற்படுத்தும்; அடுத்த முறை விதிமீறல்களில் ஈடுபடமாட்டார்கள்.இவ்வாறு அவர்கள் கூறினர்.சென்னையில் கிடைக்கும் வரவேற்புக்கேற்ப, மாநிலம் முழுதும் முக்கிய நகரங்களில் இந்த நடைமுறையை பின்பற்றவும் போலீசார் திட்டமிட்டுள்ளனர்.