கிளாம்பாக்கத்தில் கூடுதல் பஸ்களை கையாள அருகில் 2 ஏக்கர் நிலம் தேர்வு செய்ய முடிவு நெரிசலை தவிர்க்க போக்குவரத்து துறை ஆயத்தம்
சென்னை: தீபாவளி பண்டிகையின்போது, கிளாம்பாக்கத்தில் ஒரே நாளில் இரண்டு லட்சம் பேர் குவிந்ததால், கூட்டத்தை சமாளிக்க முடியாமல், போக்குவரத்து கழகங்கள் திணறின. வரும் காலங்களில் இதுபோன்ற பிரச்னையை சமாளிக்க, பேருந்து நிலையத்தை ஒட்டி இரண்டு ஏக்கர் நிலம் கூடுதலாக தேர்வு செய்ய உள்ளதாக, போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தீபாவளி பண்டிகையொட்டி, கடந்த 17, 18ம் தேதிகளில், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்த முறை கூடுதலாக பேருந்துகளை இயக்க, அரசு போக்குவரத்து கழகங்கள், போதிய ஏற்பாடுகளை செய்தன. ஆனாலும், கடும் நெரிசல் ஏற்பட்டதால், பேருந்துகள் உள்ளே வருவதிலும், வெளியே செல்வதிலும் தாமதம் ஏற்பட்டன. இதனால், முன்பதிவு செய்திருந்த பயணியர், பேருந்துகளுக்காக மணிக்கணக்கில் காத்திருந்தனர். முன்பதிவு இல்லாத பேருந்துகளை இயக்குவதிலும் சிரமம் ஏற்பட்டது. இது குறித்து, அரசு போக்குவரத்துக்கழக அதிகாரிகள் கூறியதாவது: தீபாவளி பண்டிகைக்கு, சென்னையில் இருந்து நான்கு நாட்களில் இயக்கப்பட்ட 15,429 பேருந்துகளில் எட்டு லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர். கிளாம்பாக்கம் பேருந்துகள் இயக்கத்தில், இந்த முறை சில புதிய முறைகளை கையாண்டோம். அதாவது, தென்மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகள் தனியாகவும், கிளாம்பாக்கம் புறநகர் பேருந்து நிலையத்தில் இருந்து வந்தவாசி, போளூர், திருவண்ணாமலைக்கும் பேருந்துகள் இயக்கப்பட்டன. இருப்பினும், திடீரென பயணியர் கூட்டம் நிரம்பி விடுகிறது. இந்த பேருந்து நிலையத்தில் மொத்த பயணியர் திறன் அளவு 1.45 லட்சம் பேர் தான். ஆனால், சில நேரங்களில் ஒரே நேரத்தில் இரண்டு லட்சம் கூடி விடுகிறது. வரும் காலங்களில் இதற்கு தீர்வு காணும் வகையில், பேருந்து நிலையத்தின் அருகில் 2 ஏக்கர் நிலம் கையகப்படுத்த உள்ளோம். இதற்காக, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் பேச்சு நடக்க உள்ளது. வரும் பொங்கல் பண்டிகைக்கு முன், கூடுதலாக தற்காலிக பேருந்து நிலையம் அமைத்து, கும்பகோணம், தஞ்சாவூர், திருச்சி மார்க்கமாக செல்லும் பேருந்துகளை, அங்கிருந்து இயக்க திட்டமிட்டுள்ளோம். இதனால், நெரிசல் ஏற்படுவது தடுக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.