மாடம்பாக்கம் ஏரியில் கழிவுநீர் கலப்பு அதிகாரிகள் மீது தீர்ப்பாயம் அதிருப்தி
சென்னை,மாடம்பாக்கம் ஏரியில் வீடுகளின் கழிவுநீர் கலப்பதை தடுக்க அரசு துறை அதிகாரிகள் அக்கறை காட்டவில்லை என, தென் மண்டல பசுமை தீர்ப்பாயம் அதிருப்தி தெரிவித்துள்ளது. தாம்பரம் மாநகராட்சியின் குடிநீர் ஆதாரமான மாடம்பாக்கம் ஏரியில் ஐந்து கிணறுகள் அமைக்கப்பட்டு, சிட்லபாக்கம், மாடம்பாக்கம் பகுதியில் உள்ள வீடுகளுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. கழிவுநீர் கலப்பதால் மாடம்பாக்கம் ஏரி மாசடைந்துள்ளது. இதனால் மாடம்பாக்கம் ஏரி கிணறுகளில் இருந்து வினியோகமாகும் நீரில் கழிவுநீர் நாற்றம் வீசுவதாக, அப்பகுதிமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். இது தொடர்பாக நாளிதழ்களில் வெளியான செய்தியின் அடிப்படையில், தாமாக முன்வந்து, தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் வழக்கு பதிந்து விசாரித்தது. அப்போது பிறப்பித்த உத்தரவு: மாடம்பாக்கம் ஏரி வடிகால்வாயின் அசல் அகலம் எவ்வளவு; எந்த அளவுக்கு குறுகியுள்ளது என்பதை, செங்கல்பட்டு கலெக்டரும், ஏரியின் நீர் பரவல் பகுதி உள்ளிட்ட துல்லியமான விவரங்களை நீர்வளத்துறையும் தெரிவிக்க வேண்டும். இந்த ஏரி சதுப்புநில வரைபடத்தில் இடம்பெற்றுள்ளதா என்பதை, மாநில சதுப்பு நில ஆணையமும் தெரிவிக்க வேண்டும். ஏரியின் வடிகால்கள் சீரமைக்கப்படுவதை, சென்னை குடிநீர் வாரியம் உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு உத்தரவிடப்பட்டு இருந்தது. இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்த தீர்ப்பாய நீதிபதி புஷ்பா சத்யநாராயணா, நிபுணர்குழு உறுப்பினர் சத்யகோபால் ஆகியோர், 'மாடம்பாக்கம் ஏரியில் கழிவுநீர் கலப்பது தொடர்பாக, தீர்ப்பாயம் பிறப்பித்த உத்தரவுகளை, சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் பின்பற்றவில்லை' என்று அதிருப்தி தெரிவித்து, வழக்கின் அடுத்த விசாரணையை வரும், 29ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.