கொடுக்கல் - வாங்கல் தகராறு வாலிபரை தாக்கிய இருவர் கைது
சென்னை, கடலுார் மாவட்டம், பண்ருட்டியைச் சேர்ந்தவர் ஹரிகிருஷ்ணன், 32; கட்டட பொறியாளர். அவர், வளசரவாக்கம் பகுதியில் வேலை செய்த நிறுவனத்தின் உரிமையாளர் பொழிலனின் தந்தையிடம், 1.40 லட்சமும், பண்ருட்டியைச் சேர்ந்த நண்பர் விஷ்வாவிடம், 85,000 கடன் பெற்று, மீண்டும் திரும்ப செலுத்தவில்லை.நேற்று, வளசரவாக்கம் இந்திரா நகர் பகுதியில் உள்ள தன் அலுவலகத்தின் முன், ஹரிகிருஷ்ணன் நின்று கொண்டிருந்தார். அப்போது, கடன் கொடுத்த இருவரும், தங்களது ஆதரவாளர்களுடன் ஹரிகிருஷ்ணனிடம் தகராறில் ஈடுபட்டு, தலைக்கவசத்தால் தாக்கிவிட்டு தப்பினர்.காயமடைந்த ஹரிகிருஷ்ணன், அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். பின், சம்பவம் குறித்து, வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.அதன் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார், தாக்குதலில் ஈடுபட்ட, மாங்காடு பகுதியைச் சேர்ந்த விஜயகுமார், 41, கோவூரைச் சேர்ந்த புருஷோத்தமன், 27, ஆகிய இருவரை கைது செய்தனர். மேலும், வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.