உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / நிலம் விற்பதாக டாக்டர் தம்பதியிடம் ரூ.20 லட்சம் மோசடி: இருவர் கைது

நிலம் விற்பதாக டாக்டர் தம்பதியிடம் ரூ.20 லட்சம் மோசடி: இருவர் கைது

புதுவண்ணாரப்பேட்டை: நிலத்தை விற்பதாக கூறி, டாக்டர் தம்பதியிடம், 20.50 லட்சம் ரூபாய் மோசடி செய்த இருவரை போலீசார் கைது செய்தனர். புதுவண்ணாரப்பேட்டை, திருவொற்றியூர் நெடுஞ்சாலையை சேர்ந்தவர் பிரின்சி, 51; இவரது கணவர் மைக்கேல்ராஜ். இருவரும் மருத்துவர்கள். தங்கள் கிளினிக்கை விரி வாக்கம் செய்வதற்காக, 2024ல், அப்பகுதியில் உள்ள, ரவிச்சந்திரன் என்பவருக்கு சொந்தமான, 492 சதுர அடி நிலத்திற்கு, 56.58 லட்சம் ரூபாய் விலை முடிவு செய்தனர். பின், நிலத்தின் பத்திரம் அடமானத்தில் உள்ளதை மீட்டு தருவதாக கூறி, நிலத்தின் உரிமையாளரான ரவிச்சந்திரன், கவிதா, அவரது அக்கா மகன் விஜய் ஆகியோர், 20.50 லட்சம் ரூபாயை முன் பணமாக வாங்கினர். இந்நிலையில், பத்திர பதிவு செய்வதற்காக பத்திர பதிவு அலுவலகத்தில் ஆவணங்களை சரிபார்த்தபோது, பத்திரத்தில், 287 சதுரடிக்கு பதிலாக, 492 சதுர அடி என திருத்தம் செய்யப்பட்டது தெரியவந்தது. கொடுத்த பணத்தை திரும்ப கேட்டபோது தராமல் தொடர்ந்து மூவரும் ஏமாற்றி வந்தனர். இதுகுறித்து, புதுவண்ணாரப்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து, மோசடியில் ஈடுபட்ட, புதுவண்ணாரப்பேட்டையை சேர்ந்த ரவிச்சந்திரன், 60, விஜய், 29 ஆகிய இருவரை நேற்று கைது செய்தனர். தலைமறைவான கவிதாவை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !