சர்வே பயிற்சியாளர்களுக்கு இரு நாள் பயிற்சி பட்டறை
சென்னை: தேசிய வீட்டு வருமான கணக்கெடுப்பு மற்றும் ஒருங்கிணைந்த சேவைத் துறை நிறுவனங்களின் வருடாந்திர கணக்கெடுப்பு ஆகியவை, வரும் ஏப்., மாதம் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மத்திய அரசின் புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க துறையின் தேசிய புள்ளிவிபர அலுவலகம் சார்பில், இரண்டு நாள் தேசிய பயிற்சியாளர் பட்டறை, சென்னையில் நேற்று துவங்கியது. மத்திய அரசின் புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க துறையின் பொது இயக்குநர் கீதா சிங் ரத்தோட், பயிற்சி பட்டறையை துவக்கி வைத்து பேசியதாவது: தேசிய வீட்டு வருமான கணக்கெடுப்பு மற்றும் ஒருங்கிணைந்த சேவைத் துறை நிறுவனங்களின் வருடாந்திர கணக்கெடுப்பு சர்வே, மிக முக்கியமானது. இவற்றுக்கு, எந்த டேட்டாவும் இல்லை. டிஜிட்டல் முறையில், அகில இந்திய அடிப்படையில் கணக்கெடுப்பின் களப்பணியைத் துவங்குவதற்கு முன், இது ஒரு ஆயத்த பயிற்சித் திட்டமாகும். ஒவ்வொரு முறையும், இந்திய அளவில் எடுக்கப்படும் சர்வே, நாட்டிற்கு மிக முக்கியமானது என, கவனத்தில் கொண்டு சிரத்தையுடன் கணக்கெடுப்போருக்கு பயிற்சி அளிக்க வேண்டும். அதற்கு, இந்த இரண்டு நாள் பயிற்சி பட்டறை மிகவும் பயனுள்ளதாக அமையும். இவ்வாறு அவர் பேசினார். இப்பயிற்சியில், நாடு முழுதும் இருந்து, 250க்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர்.