உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / போதைப்பொருள் கடத்திய இருவர் கைது 5 துப்பாக்கி, 79 தோட்டாக்கள் பறிமுதல்

போதைப்பொருள் கடத்திய இருவர் கைது 5 துப்பாக்கி, 79 தோட்டாக்கள் பறிமுதல்

சென்னை, ஜன. 4-சென்னையில் இருந்து பங்களாதேஷ், இலங்கை ஆகிய நாடுகளுக்கு, போதைப்பொருள் கடத்திய கும்பலைச் சேர்ந்த இருவரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து, ஐந்து கை துப்பாக்கிகள், 79 தோட்டாக்கள், 1 கிலோ மெத்ஆம்பெட்டமைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.சென்னை அரும்பாக்கத்தில், கடந்த ஆண்டு மெத்ஆம்பெட்டமைன் போதைப்பொருள் விற்ற வழக்கில், கொடுங்கையூரைச் சேர்ந்த தீபக், 31, அவரது மனைவி டாலி மேத்தா, 27, உட்பட, 10க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மாதவரத்தில், 15 கிலோ மெத்ஆம்பெட்டமைன் போதைப்பொருளை சமீபத்தில் பறிமுதல் செய்த போலீசார், கடத்தல் கும்பலைச் சேர்ந்த எட்டு பேரை கைது செய்தனர்.இந்த கும்பலுடன் தொடர்பில் இருந்த வியாசர்பாடியைச் சேர்ந்த கணேசன், 51, திருவள்ளூரைச் சேர்ந்த மதன், 46, கொடுங்கையூரைச் சேர்ந்த ரவி, 48, ஆகியோரை, அரும்பாக்கம் போலீசார் கைது செய்தனர். இவர்களின் வீடுகளில் இருந்து, 39.01 கிலோ கேட்டமைன், 105 கிராம் தங்க நகைகள் மற்றும் 51 லட்சம் ரூபாயை போலீசார் பறிமுதல் செய்தனர். விசாரணையில், மற்றொரு போதைப்பொருள் கடத்தல் கும்பல், சென்னையில் ஆதிக்கம் செலுத்தி வருவது தெரியவந்தது.அரும்பாக்கம் தனிப்படை போலீசார், சிட்லபாக்கத்தில் பதுங்கியிருந்த போதை கடத்தல் கும்பலைச் சேர்ந்த ராஜா, 42, சத்திய சீலன், 36, ஆகிய இருவரையும், நேற்று முன்தினம் இரவு கைது செய்தனர். அவர்களிடம், 1.40 கிலோ மெத்ஆம்பெட்டமைன், ஐந்து கை துப்பாக்கிகள், 79 தோட்டாக்கள், கார் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. இருவரும், சிறையில் அடைக்கப்பட்டனர்.

இலங்கைக்கு கடத்தல்

இதுகுறித்து, போலீசார் கூறியதாவது:போதைப்பொருள் கடத்தல் கும்பலின் மொபைல் போன்களை ஆய்வு செய்ததில், இருவர் தொடர்பில் இருப்பது தெரிந்தது. அதில், சத்தியசீலன் ஏற்கனவே தேடப்பட்ட குற்றவாளி.இவர்கள், மெத்ஆம்பெட்டமைன் தயாரிக்கும் திரவ ரசாயனத்தை டில்லியில் இருந்து வாங்கி வந்து, வாட்ஸாப் குழு அமைத்து, சென்னையில் இருந்து பங்களாதேஷ் மற்றும் இலங்கைக்கு சப்ளை செய்துள்ளனர். இவர்களுடன் தொடர்பில் இருந்த இலங்கை நபரை பிடிக்க முடிவு செய்து உள்ளோம். போதைப்பொருள் போல், துப்பாக்கிகளை சப்ளை செய்தனரா என்பது குறித்தும் விசாரித்து வருகிறோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.தாய்லாந்தில் இருந்து ரூ 3.5 கோடி கஞ்சா கடத்தல்: ஒருவர் கைதுதாய்லாந்து நாட்டில் இருந்து, சென்னைக்கு கடத்தி வரப்பட்ட, 3.5 கிலோ கஞ்சாவை, விமான நிலைய சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். வெளிநாடுகளில் இருந்து, அதிக அளவில் போதைப்பொருட்கள் கடத்தி வரப்படுவதாக, விமான நிலைய சுங்க அதிகாரிகளுக்கு, சில தினங்களுக்கு முன்பு தகவல் கிடைத்தது.அதன் அடிப்படையில், வெளிநாடுகளில் இருந்து வரும் விமானங்களை கண்காணித்தனர். சில தினங்களுக்கு முன்பு, தாய்லாந்து தலைநகர் பாங்காங்கில் இருந்து, 'ஏர் ஏசியா' விமானம் வந்தது.அதில் வந்த பயணியர், குடியுரிமை சோதனைகளை முடித்து, சுங்க சோதனைக்குசென்றனர். அப்போது, சென்னை யைச் சேர்ந்த பயணி ஒருவர், சுற்றுலாவுக்கு சென்று மறுநாளே திரும்பியதைக் கண்டனர். அவர் மீது சந்தேகமடைந்த அதிகாரிகள், அவரது பாஸ்போர்ட் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்தனர்.அவரது உடைமைகளை பிரித்து பார்த்தபோது, உயர்ரக கஞ்சா இருப்பது தெரியவந்தது. ஏழு பார்சலில்இருந்த, 3.5 கிலோ மதிப்பிலான கஞ்சாவைப் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு 3.5 கோடி ரூபாய்.அவரை கைது செய்து விசாரித்தபோது, அவர் ஏற்கனவே, ஐக்கிய அரபு அமீகரம், சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளுக்கு சென்றதும், கஞ்சா கும்பலுடன் தொடர்பில் இருப்பதும் தெரிய வந்தது. அவரிடம் இருந்து கஞ்சா பார்சலை பெற வந்தவர்கள் குறித்தும் விசாரித்து வருகின்றனர்.கடந்த சில தினங்களில், சென்னை விமான நிலையத்தில், இருவரிடம் மட்டும் 9.5 கோடி ரூபாய் மதிப்புள்ள உயர் ரக கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ