உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / போலீஸ் விசாரணையில் குளறுபடி கஞ்சா வழக்கில் இருவர் விடுதலை

போலீஸ் விசாரணையில் குளறுபடி கஞ்சா வழக்கில் இருவர் விடுதலை

சென்னை: போலீஸ் விசாரணையில் குளறுபடி உள்ளதாக கூறி, 21 கிலோ கஞ்சா வழக்கில் கைதான இருவரையும், சென்னை சிறப்பு நீதிமன்றம் விடுதலை செய்தது. கடந்த 2015 செப்., 25ல், சேத்துப்பட்டு கோபால்சாமிநகர் கெங்குரெட்டி பாலம் அருகே சந்தேகத்துக்கு இடமாக நின்றிருந்த, அப்பகுதியை சேர்ந்த தங்கையா, 52, பாலசுப்பிரமணியன், 49, அமைந்தகரையை சேர்ந்த பாலாஜி, 44, ஆகியோரை பிடித்து, சேத்துப்பட்டு போலீசார் சோதனை செய்தனர். அவர்கள், சாக்கு பையில் மறைத்து வைத்திருந்த, 21 கிலோ 300 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்; மூவரையும் கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை, சென்னை போதைப்பொருள் கடத்தல் தடுப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதி எம்.ராஜலட்சுமி முன் நடந்தது. அப்போது, குற்றம் சாட்டப்பட்ட நபர்கள் சார்பில், வழக்கறிஞர் டி.சீனிவாசன் ஆஜராகி, ''கைதுக்கான காரணத்தை இருவரிடமும் போலீசார் தெரிவிக்கவில்லை. பொது சாட்சிகளை சேர்க்கவில்லை. எப்.ஐ.ஆர்., பதிவுக்கு முன், கைப்பற்றுதல் மகசரில் குற்ற எண் தரப்பட்டுள்ளது. பல்வேறு குளறுபடிகள் உள்ளன,'' என்றார். இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: வழக்கு விசாரணையில் பல்வேறு குறைபாடுகள் உள்ளன. குற்றச்சாட்டுகள் போதிய ஆதாரங்களுடன் நிரூபிக்கப்படவில்லை. எனவே, தங்கையா, பாலசுப்பிரமணியம் ஆகியோர் விடுதலை செய்யப்படுகின்றனர். பாலாஜி தலைமறைவாக உள்ளதால், அவர் மீதான வழக்கு தனியாக விசாரிக்கப்படும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ