உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / இரட்டிப்பு பணம் சம்பாதிக்கும் ஆசையில் 1.61 கோடி ரூபாய் இழந்த கொரட்டூர் நபர் இருவர் கைது; முக்கிய குற்றவாளிக்கு வலை

இரட்டிப்பு பணம் சம்பாதிக்கும் ஆசையில் 1.61 கோடி ரூபாய் இழந்த கொரட்டூர் நபர் இருவர் கைது; முக்கிய குற்றவாளிக்கு வலை

ஆவடி, 'ஆன்லைன் டிரேடிங்' மோசடி கும்பலுக்கு வங்கி கணக்கு கொடுத்து உதவி 'கமிஷன்' பெற்ற இருவர் கைது செய்யப்பட்டனர். கொரட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் வரதராஜன், 60. இவர், கடந்த மே மாதம், முகநுால் பக்கத்தில் விபரங்களை தேடியபோது, 'ஆன்லைன் டிரேடிங்' குறித்த விளம்பரத்தை பார்த்துள்ளார். விளம்பரத்தில் கொடுக்கப்பட்டு இருந்த மொபைல் போன் எண்ணில் பேசியபோது, சிறிய தொகை முதலீடு செய்தால், அதிக கமிஷன் கிடைக்கும் என, மர்ம நபர்கள் ஆசை வார்த்தை கூறியுள்ளனர். அதன்படி, முதலில் 5,000 ரூபாய் முதலீடு செய்தபோது, அவருக்கு சிறிய தொகை கமிஷனாக கிடைத்துள்ளது. பின், மர்ம நபர்கள் கூறிய எட்டு வங்கி கணக்கிற்கு 5 லட்சம், 10 லட்சம், 20 லட்சம் என, 20க்கும் மேற்பட்ட தவணைகளில், 1.61 கோடி ரூபாய் அனுப்பி உள்ளார். ஆனால், மர்ம நபர்கள் கூறியது போல், 'கமிஷன்' தொகை வரவில்லை. அதேபோல, முதலீடு செய்த பணத்தையும் திருப்பி எடுக்க முடியவில்லை. ஏமாற்றப்பட்டதை உணர்ந்த வரதராஜன், ஆவடி மத்திய குற்றப்பிரிவில் கடந்த ஜூன் மாதம் புகார் அளித்தார். புகாரை விசாரித்த இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி தலைமையிலான தனிப்படை போலீசார், நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த டேனியல் ராஜ்குமார், 34, கோயம்புத்துார் மாவட்டத்தைச் சேர்ந்த நவீன், 39, ஆகியோர் கைது செய்யப்பட்டனர். விசாரணையில், இருவரும் 'கமிஷன்' தொகைக்கு ஆசைப்பட்டு, மோசடி நபர்களுக்கு வங்கி கணக்கு கொடுத்து உதவியது தெரிந்தது. இருவரையும் கைது செய்த சைபர் கிரைம் போலீசார், பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, நேற்று சிறையில் அடைத்தனர். அவர்களிடம் இருந்து இரண்டு மொபைல் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தலைமறைவாக உள்ள முக்கிய குற்றவாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை