கேக் கடை ஊழியர் உட்பட இருவர் மின்சாரம் பாய்ந்து பலி
சென்னை:வெவ்வேறு சம்பவங்களில், கேக் கடை ஊழியர் உட்பட இருவர் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தனர். இரு சம்பவங்கள் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.அய்யப்பன்தாங்கல், பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்தவர் நீல் ஆகாஷ், 26. இவர், கே.கே.நகர் 80 அடி சாலையில் உள்ள 'கேக்' கடையில் பணி புரிந்தார்.இக்கடையில், நேற்று முன்தினம் இரவு பூச்சி கொல்லி மருந்து அடிக்கப்பட்டது. இதையடுத்து, நேற்று காலை 6:00 மணியளவில் நீல் ஆகாஷ் கடையை திறந்து சுத்தம் செய்து கொண்டிருந்தார்.அப்போது, தரையில் கிடந்த மின் ஒயரை மிதித்துள்ளார். இதில், அவர் மீது மின்சாரம் பாய்ந்து மயங்கி விழுந்தார். கடையின் மேலாளர் வித்யா தர்மன், அவரை மீட்டு வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தார்.அங்கு மருத்துவ பரிசோதனையில், அவர் உயிரிழந்தது தெரியவந்தது. கே.கே.நகர் போலீசார் உடலை மீட்டு, கே.கே.நகர் இ.எஸ்.ஐ., மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.மற்றொரு சம்பவம்*அண்ணா நகர், 'எல் - பிளாக்'கைச் சேர்ந்தவர் பத்மநாபன், 70; ஓய்வு பெற்ற மத்திய அரசு ஊழியர். இவர் நேற்று காலை குளியலறைக்கு சென்றார். அங்கு 'வாட்டர் ஹீட்டர்' வேலை செய்யவில்லை. இதையடுத்து, குளித்து விட்டு வெளியே வந்த பத்மநாபன், வீட்டிற்கு வெளியே உள்ள மின் இணைப்பு பெட்டியில் தான் பிரச்னை என நினைத்து, அதை சரிசெய்ய, ஈரக்கையால் பெட்டியை தொட்டதாக கூறப்படுகிறது.அப்போது, மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்து வந்த திருமங்கலம் போலீசார், உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.