போலி ஆவணம் சமர்ப்பித்து ரூ.7 கோடி வங்கி கடன் மோசடி பெண்கள் இருவர் கைது
சென்னை: வங்கியில் போலி ஆவணம் சமர்ப்பித்து, 7 கோடி ரூபாய் கடன் பெற்று மோசடியில் ஈடுபட்ட இரு பெண்களை, போலீசார் கைது செய்தனர். எழும்பூர், எஸ்.பி.ஐ., வங்கியில் கிளை மேலாளராக பணிபுரிபவர் சேதுமாதவன், 45. இவர், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில், தங்களது வங்கியில் போலி ஆவணங்கள் சமர்ப்பித்து, வீட்டு கடனாக 7 கோடி ரூபாய் பெற்று, திரும்ப செலுத்தாமல் மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி குறிப்பிட்டு இருந்தார். புகாரின் அடிப்படையில், வங்கி மோசடி புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதில், பெரம்பூரைச் சேர்ந்த சரஸ்வதி, 46 என்பவரும், வியாசர்பாடியைச் சேர்ந்த ஜெமிலா பேகம், 49 என்பவரும் இணைந்து, போலி ஆவணங்கள் சமர்ப்பித்து, 7 கோடி ரூபாய் கடன் பெற்றது உறுதியானது. அதை இருவரும் பங்கிட்டுள்ளனர். இருவரையும் நேற்று வங்கி மோசடி புலனாய்வு பிரிவு போலீசார் கைது செய்தனர். மோசடிக்கு உடந்தையாக இருந்தவர்களை தேடி வருகின்றனர்.