நீருக்கடியில் கிறிஸ்துமஸ் குடில் வி.ஜி.பி.,யில் கண்டு ரசிக்கலாம்
சென்னை: கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகையை முன்னிட்டு, வி.ஜி.பி., மரைன் கிங்டம் அருங்காட்சியகத்தில், நீருக்கடியில் கிறிஸ்துமஸ் குடில் மற்றும் 'மெர்மெய்ட்' எனும் கடற்கன்னி ஷோ, வரும் ஜன., 4ம் தேதி வரை நடக்கிறது. இ.சி.ஆர்., ஈஞ்சம்பாக்கத்தில் வி.ஜி.பி., மரைன் கிங்டம் அருங்காட்சியகம் உள்ளது. இங்கு ஆழ்கடல் மீன்கள், சதுப்பு நில மீன்கள், நன்னீர் மீன்கள் என, 5,000க்கும் மேற்பட்ட மீன் வகைகள் உள்ளன. உள்ளூர் மட்டுமின்றி, வெளியூர், வெளிநாட்டு சுற்றுலா பயணியரும், அதிகளவில் வந்து செல்கின்றனர். இது குறித்து, வி.ஜி.பி., நிர்வாக இயக்குநர் ரவிதாஸ் கூறியதாவது: அருங்காட்சியகத்திற்கு வரும் சுற்றுலா பயணியரின் வசதிக்காக, கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகையொட்டி, நீருக்கடியில் கிறிஸ்துமஸ் குடில் வைக்கப்பட்டுள்ளது. தவிர, கடற்கன்னி ஷோவும் நடத்தப்பட்டு வருகிறது. பார்வையாளர்களை மிகவும் கவர்ந்துள்ளதால், வரும் ஜன., 4ம் தேதி வரை இதை கண்டு ரசிக்கலாம். தினமும் காலை 11:00, மதியம் 12:00 மணி, 3:00, மாலை 5:00, 6:00 மணிக்கு என, ஐந்து ஷோக்கள் நடத்தப்படுகின்றன. ஒவ்வொரு பண்டிகைக்கு ஏற்ப, இதுபோன்ற புதுமையான நிகழ்ச்சிகளை நடத்துவது, பார்வையாளர்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.